குஜராத்தில் முதல்வர் தவிர்த்த அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா - நாளை அமைச்சரவை விரிவாக்கம்

குஜராத்தில் முதல்வர் தவிர்த்த அனைத்து அமைச்சர்களும் தங்கள் பதவிகளை இன்று ராஜினாமா செய்தனர். இதையடுத்து, அமைச்சரவை விரிவாக்கம் நாளை நடைபெற உள்ளது.
குஜராத்தில் முதல்வராக இருப்பவர் பூபேந்திர படேல். கடந்த 2021, செப். 13 முதல் இவர் முதல்வராக இருந்து வருகிறார். கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் கடைசியாக நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 182 தொகுதிகளில் பாஜக 162 இடங்களில் வெற்றி பெற்று அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி செய்து வருகிறது. இங்கு பிரதான எதிர்க்கட்சியான காங்கிரசுக்கு 12 எம்எல்ஏக்கள் மட்டுமே உள்ளனர். குஜராத்தின் அடுத்த சட்டப்பேரவைத் தேர்தல் 2027ம் ஆண்டு நடைபெற உள்ளது.
சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு வருடங்கள் உள்ள நிலையில், திடீர் திருப்பமாக பூபேந்திர படேல் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த அமைச்சர்கள் அனைவரும் ராஜினாமா செய்துள்ளனர். அவர்களின் ராஜினாமாவை முதல்வர் ஏற்றுக்கொண்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
புதிதாக அமைச்சரவையை உருவாக்கும் திட்டத்துடன் முதல்வர் பூபேந்திர படேல், இன்று மாலை ஆளுநர் ஆச்சார்ய தேவ்விரத்தைச் சந்திக்க உள்ளார். அப்போது, புதிய அமைச்சரவையை அமைக்க அவர் உரிமை கோருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, புதிய அமைச்சர்கள் நாளை பதவி ஏற்பார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
பல்வேறு அமைச்சர்களின் செயல்பாடுகள் மீது அதிருப்தி உள்ளதைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இது தொடர்பாக தெரிவித்த பாஜக மூத்த தலைவர் ஒருவர், "புதிதாக 10 பேர் அமைச்சர்களாக நியமிக்கப்படுவார்கள். தற்போதுள்ள அமைச்சர்களில் கிட்டத்தட்ட பாதி பேர் இந்த மறு சீரமைப்பால் பதவியை இழப்பார்கள்" என தெரிவித்துள்ளார்.
குஜராத்தில் இன்னும் சில மாதங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த மாற்றம் முக்கியத் திருப்பமாகக் கருதப்படுகிறது.