நீண்ட நேரம் செல்போன் பார்த்தால் என்ன ஆகும்?

நீண்ட நேரம் செல்போன் பார்த்தால் என்ன ஆகும்?

இன்றைய உலகில் திறன்பேசி மனித வாழ்வின் அத்தியா வசியத் தேவைபோல மாறி விட்டது. தகவல் தொடர்பு, கல்வி, தொழில், வங்கி, வணிகம், பொழுதுபோக்கு என அனைத்துக்கும் அது ஒரு பாலமாகச் செயல்படுகிறது. அதேநேரத்தில் உடல், மன ஆரோக் கியத்துக்கு அது பெரும் சவாலாகவும் உள்ளது. நம் உடல்நிலை, பழக்கவழக்கங்கள், குடும்ப உறவுகள், சமூக உறவுகள் அனைத்தையும் திரை நேரம் தலைகீழாக மாற்றிக் கொண்டிருக்கிறது.

தரவுகள் சொல்வது என்ன? - இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ICMR) 2024இல் வெளியிட்ட தரவுகளின்படி இளைஞர்கள் நாள்தோறும் 3.5 முதல் 4 மணி நேரம்வரை திறன்பேசியைப் பயன்படுத்துகின்றனர். குழந்தைகள் தினமும் 2 – 3 மணி நேரம்வரை திரை முன் செலவிடுகின்றனர். குழந்தைகளின் திரை நேரம் ஒரு மணி நேரத்துக்கு மேல் சென்றால் தூக்கக் குறைவு, கவனக்குறைவு, கண் சோர்வு, உடல் எடை அதிகரிப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்படும் அபாயம் அதிகரிக்கும் என உலக சுகாதார நிறுவனத்தின் 2023ஆம் ஆண்டு அறிக்கை எச்சரித்துள்ளது.