உ.பி.யில் மதச்சடங்கு பெயரில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்
உ.பி.யின் அலிகர் நகரைச் சேர்ந்தவர் ஜரீனா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கு கடந்த 2015-ல் அவரது 15-வது வயதில் அம்ரோஹா நகரை சேர்ந்த ஒருவருடன் நிக்காஹ் எனும் திருமணம் நடைபெற்றது. ஜரீனாவின் கணவர் அவரை 2016 மற்றும் 2021-ல் 2 முறை முத்தலாக் கூறி விவாகரத்து செய்துள்ளார். அப்போது ஜரீனா தனது கணவரையே மீண்டும் மணமுடிக்க நிக்காஹ் ஹலாலா எனும் பெயரில் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உள்ளார்.
உ.பி.யின் சில முஸ்லிம்கள் இடையே ‘நிக்காஹ் ஹலாலா’ என்ற சர்ச்சைக்குரிய மதச்சடங்கு கடும் எதிர்ப்புகளுக்கு இடையே நிலவுகிறது. இந்த சடங்கு, விவாகரத்தான தம்பதிகள் மீண்டும் திருமணம் செய்துகொள்ள கடைப்பிடிக்கப்படுகிறது. இதில் அப்பெண் வேறு ஒரு ஆணை மணமுடித்து உடனடியாக அவரிடம் இருந்து விவாகரத்து பெற வேண்டும். இதன் பிறகு அப்பெண் தனது முதல் கணவருடன் மீண்டும் இணைந்து வாழலாம்.
எனினும் புதிய ஆடவரால் அப்பெண்ணுக்கு உடனடியாக விவாகரத்து வழங்கப்படாமல் பெரும்பாலும் அப்பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகிறார். மிகவும் தவறான இந்த நிக்காஹ் ஹலாலா மீது உச்ச நீதிமன்றத்தில் கடந்த 2019-ல் மனு அளிக்கப்பட்டு இன்னும் விசாரணக்கு வராமல் உள்ளது.
இந்நிலையில், ஜரீனா கடந்த டிசம்பர் 9, 2025-ல் அம்ரோஹா காவல் நிலையத்தில் அளித்த புகாரில் ‘‘ஒவ்வொரு முறையும் நான் யாரிடமோ ஒப்படைக்கப்படுவது போல் உணர்ந்தேன். இதை வெளியில் சொல்ல மிகவும் வெட்கப்பட்டதால், இதை நான் யாரிடமும் சொல்லவில்லை. என் மகளுக்கும் அதைப் பற்றி தெரியவரும் என்பதால் புகார் தர தாமதமானது.
எனது கணவர், மைத்துனர் மற்றும் சில மவுலானாக்கள் என்னை பலமுறை ஹலாலா சடங்கிற்கு உட்படுத்தினர். இதற்காக எனக்கு கொலை மிரட்டலும் விடுத்தனர்’’ என குற்றம் சாட்டி இருந்தார்.
இது தொடர்பாக அம்ரோஹா போலீஸார், முத்தலாக் தடை மற்றும் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இத்துடன் பிஎன்எஸ் சட்டத்தின் கீழ் பாலியல் வன்கொடுமை, கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழும் வழக்குகள் பதிவு செய்துள்ளனர். ஜரீனாவின் கணவரை போலீஸார் கைது செய்துள்ளனர். மைத்துனர் மற்றும் சில மவுலானாக்களை தேடி வருகின்றனர்.