காலை எழுந்தவுடன் மூக்கடைப்பு பிரச்சனையா? உடனடி நிவாரணத்திற்கு இதை செய்தால் போதும்!

காலை எழுந்தவுடன் மூக்கடைப்பு பிரச்சனையா? உடனடி நிவாரணத்திற்கு இதை செய்தால் போதும்!

குளிர்காலம் என்றாலே இதமான சூழல் என்று மகிழ்ச்சியாக இருந்தாலும், கூடவே வரும் ஒரு தொல்லைதான் மூக்கடைப்பு . குறிப்பாக, இரவில் நன்றாக உறங்கிவிட்டு காலையில் எழுந்தவுடன் மூக்கு அடைத்துக் கொள்வது பலருக்கும் அன்றாடப் பிரச்சனையாக உள்ளது. இரவு முழுவதும் சிரமப்பட்டு மூச்சுவிடுதல், அதிகாலையில் இருமல் மற்றும் தொண்டை வலி என இது அன்றைய நாளின் தொடக்கத்தையே சோர்வாக்கிவிடும்.

இந்த மூக்கடைப்பு பிரச்சனை சளி, ஒவ்வாமை அல்லது சைனஸ் பிரச்சனை எனப் பல காரணங்களால் வரலாம். அதன்படி, குளிர்காலத்தில் ஏன் மூக்கடைப்பு ஏற்படுகிறது, குறிப்பாக இரவு மற்றும் காலையில் ஏன் இது மோசமாகிறது, மற்றும் வீட்டிலேயே இதைச் சமாளிப்பதற்கான எளிய வழிகள் என்னென்ன என்பதை இந்த தொகுப்பின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

இரவு மற்றும் காலையில் மூக்கடைப்பு ஏன் அதிகரிக்கிறது?

பொதுவாக, மூக்கடைப்பு என்பது சளி அல்லது நோய் தொற்றினால் மூக்கின் உட்புற ரத்த நாளங்களில் ஏற்படும் வீக்கத்தால் உண்டாவது. இந்த வீக்கம் இரவில் மற்றும் காலையில் அதிகரிக்கும் சில காரணங்கள் உள்ளன. நாம் படுக்கும்போது, ஈர்ப்பு விசையால் திரவங்கள் மற்றும் சளி ஆகியவை மூக்கு மற்றும் சைனஸ் குழிகளில் தேங்கத் தொடங்குகின்றன.

உட்கார்ந்திருக்கும்போது அல்லது நடக்கும்போது இந்த திரவங்கள் வெளியேறிவிடும். ஆனால், கிடைமட்டமாகப் படுக்கும்போது திரவங்கள் தேங்குவதால் அடைப்பு அதிகமாகிறது. இரவு நேரத்தில் வெப்பநிலை கணிசமாகக் குறையும்போது, மூக்கின் உட்புறம் அதிக வறட்சி அடைகிறது. இந்த வறட்சி, வீக்கத்தை அதிகப்படுத்தி அடைப்பை ஏற்படுத்துகிறது.

படுக்கை விரிப்புகள், தலையணைகள் மற்றும் போர்வைகளில் தூசி) மற்றும் செல்லப் பிராணிகளின் முடிகள் இருக்கலாம். இந்த ஒவ்வாமை காரணிகள், இரவு முழுவதும் மூக்கின் சவ்வுகளைத் தூண்டி, வீக்கத்தையும் அடைப்பையும் அதிகப்படுத்துகின்றன.

குளிர்காலத்தில், வீடுகளில் ஹீட்டர் பயன்படுத்துவது அறையின் ஈரப்பதத்தை வெகுவாகக் குறைத்து, காற்றை வறண்டு போகச் செய்கிறது. இந்த வறண்ட காற்று மூக்கின் சவ்வுகளை எரிச்சலடையச் செய்து, சளி உற்பத்தியை அதிகப்படுத்துகிறது.

சமாளிக்கும் வழி என்ன? மூக்கடைப்பைக் குறைக்கப் பல எளிய, பாதுகாப்பான வீட்டு வைத்தியங்கள் உள்ளன. இவை தற்காலிக நிவாரணம் அளித்து, நிம்மதியான தூக்கத்தையும், காலையில் புத்துணர்ச்சியான எழுந்திருக்க உதவும்.

  • ஒரு பாத்திரத்தில் சூடான நீர் ஊற்றி, ஒரு துணியால் தலையை மூடிக்கொண்டு ஆவி பிடிக்கலாம். ஆவி, மூக்கின் பாதையில் உள்ள சளியைத் தளர்த்தி வெளியேற்ற உதவுகிறது. இது வீக்கத்தையும் குறைக்கும்.
  • உப்பு நீரால் மூக்கின் பாதைகளைச் சுத்தம் செய்வது, தேங்கியுள்ள சளியை அகற்றவும், மூக்கின் சவ்வுகளின் வீக்கத்தைக் குறைக்கவும் சிறந்த வழி. இதை இரவு தூங்குவதற்கு முன்னும், காலையில் எழுந்த பிறகும் செய்யலாம்.
  • தூங்கும்போது தலையை சற்று உயர்த்தி (இரண்டு தலையணைகளை பயன்படுத்துவது போல) படுப்பதன் மூலம், ஈர்ப்பு விசையால் சளி தேங்குவது தடுக்கப்படுகிறது. இது மூக்கடைப்பின் தீவிரத்தைக் குறைக்கும்.
  • தூங்கும் அறையில் ஒரு ஈரப்பதமூட்டியைப் பயன்படுத்துவது, காற்றின் வறட்சியைக் குறைத்து, மூக்கின் பாதைகள் வறண்டு போவதைத் தடுக்கும். சுத்தமான நீரையே பயன்படுத்தவும்.
  • வெந்நீர், மூலிகைத் தேநீர் அல்லது சிக்கன் சூப் போன்ற சூடான திரவங்களை அருந்துவது, தொண்டையில் உள்ள சளியைத் தளர்த்தவும், உடலுக்கு நீரேற்றத்தை (Hydration) அளிக்கவும் உதவுகிறது.
  • இந்த வழிமுறைகளைத் தொடர்ந்து பின்பற்றுவதன் மூலம், குளிர்கால மூக்கடைப்பைச் சமாளித்து, புத்துணர்ச்சியுடன் நாளைத் தொடங்கலாம். இருப்பினும், மூக்கடைப்பு கடுமையானதாக இருந்தால் அல்லது நீண்ட நாட்களுக்குத் தொடர்ந்தால், மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம்.