ஒரு காலண்டர் ஆண்டில் 100 சிக்ஸர்கள்: பாகிஸ்தானின் முதல் வீரராக ஃபர்ஹான் சாதனை!

ஒரு காலண்டர் ஆண்டில் 100 சிக்ஸர்கள்: பாகிஸ்தானின் முதல் வீரராக ஃபர்ஹான் சாதனை!

டி20 கிரிக்கெட்டில் ஒரு காலண்டர் ஆண்டில் 100+ சிக்ஸர்களை விளாசிய முதல் பாகிஸ்தான் வீரர் என்ற சாதனையை சாஹிப்சாதா ஃபர்ஹான் படைத்துள்ளார்.

பாகிஸ்தானில் நடைபெற்று வரும் முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று பாகிஸ்தான் - இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ராவல்பிண்டியில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 128 ரன்களை மட்டுமே சேர்த்தது.

இதில் அதிகபட்சமாக இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜனித் லியானகே 41 ரன்களைச் சேர்த்ததை தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். பாகிஸ்தான் தரப்பில் முகமது நவாஸ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பின்னர் எளிய இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் அணிக்கு ஃபர்ஹான் அதிரடியான தொடக்கத்தை வழங்கினார்.

அதேசமயம் மறுமுனையில் விளையாடிய சைம் அயுப், பாபர் ஆசாம், சல்மான் ஆகா ஆகியோர் சோபிக்க தவற, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஃபர்ஹான் அரைசதம் கடந்தது மட்டுமின்றி 80 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன் மூலம் பாகிஸ்தான் அணி 15.3 ஓவர்களில் இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய சாஹிப்சாதா ஃபர்ஹான் 45 பந்துகளில் 6 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள் என 80 ரன்களை சேர்த்திருந்தார். இதன் மூலம் அவர் டி20 கிரிக்கெட்டில் 100 சிக்ஸர்களையும் கடந்திருந்தார். மேற்கொண்டு டி20 கிரிக்கெட்டில் ஒரு காலண்டர் ஆண்டில் 100+ சிக்ஸர்களை விளாசிய முதல் பாகிஸ்தான் வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.

மேற்கொண்டு டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஒரு காலண்டர் ஆண்டில் 100+ சிக்ஸர்களை அடித்த உலகின் 5ஆவது வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றிருக்கிறார். முன்னதாக வெஸ்ட் இண்டீஸின் முன்னாள் ஜாம்பவான் கிறிஸ் கெயில் 6 முறை ஒரு காலண்டர் ஆண்டில் 100+ சிக்ஸர்களை விளாசி சாதனை படைத்துள்ளார். குறிப்பாக 2015ஆம் ஆண்டில் மட்டும் அவர் 135 சிக்ஸர்களை விளாசி தள்ளியுள்ளார்.