கோலி, ரோஹித் மேலும் 4 ஆண்டுகள் விளையாட வேண்டும் - ஆஃப்கான் வீரர் குல்பதின் நைப்
இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் குறைந்தபட்சம் நான்கு ஆண்டுகளுக்கு அனைத்து வகை கிரிக்கெட்டிலும் விளையாட வேண்டும் என ஆஃப்கானிஸ்தான் ஆல் ரவுண்டர் குல்பதின் நைப் கூறியுள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன்களும், நட்சத்திர வீரர்களுக்கான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரும் சர்வதேச டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளனர். இதனால் அவர்கள் இருவரும் தற்சமயம் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் மட்டுமே தங்களின் முழு கவனத்தையும் செலுத்தி வருகின்றனர். அந்தவகையில் இருவரும் சமீபத்தில் நடைபெற்று முடிந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தியுள்ளனர்.
அதிலும் குறிப்பாக விராட் கோலி முதலிரண்டு போட்டிகளில் சதமும், மூன்றாவது போட்டியில் அரைசதம் கடந்தும் அசத்தினார். மறுபக்கம் ரோஹித் சர்மா முதலிரண்டு போட்டிகளில் பெரிதளவில் ரன்களைச் சேர்க்க தவறினாலும், மூன்றாவது ஆட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட 75 ரன்களைக் குவித்தார். இதன் காரணமாக இருவரும் எதிர்வரும் 2027ஆம் ஆண்டு ஐசிசி ஆடவர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடுவார்கள் என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்து வருகின்றன.
இந்த நிலையில், விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரும் மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் அடுத்த நான்கு ஆண்டுகள் விளையாட வேண்டும் என்று ஆஃப்கானிஸ்தான் வீரர் குல்பதின் நைப் கோரிக்கை விடுத்துள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐஎல்டி20 தொடரின் போது ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்துடனான உரையாடலின் போது அவர் இந்த கருத்தினை தெரிவித்துள்ளார்.
அதில் பேசிய குல்பதின் நைப், ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் இந்த விளையாட்டின் மிகச்சிறந்த வீரர்கள். அதனால் நான் அவர்களைப் பற்றி அதிகம் பேச விரும்பவில்லை. ஆனால் என்னால் ஒரே ஒரு விஷயத்தை மட்டும் கூற நினைக்கிறேன். ரோஹித் மற்றும் விராட் கோலி இருவரும் குறைந்தபட்சம் நான்கு ஆண்டுகளுக்கு மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் விளையாட வேண்டும்" என்றார். இதனையடுத்து குல்பதின் நைபின் கருத்து பேசுபொருளாக மாறியுள்ளது.
சர்வதேச கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ள இருவரும், கடந்த டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருடன் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தனர். அதனைத் தொடர்ந்து இந்தாண்டு, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டிலும் ஓய்வை அறிவித்திருக்கும் ரோஹித் சர்மா, விராட் கோலி தற்போது ஒருநாள் கிரிக்கெட்டில் தங்கள் ஆதிக்கத்தை செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.