தமிழ்நாடு அணிக்காக விளையாடியது என் வாழ்நாள் சாதனை - முரளி விஜய் ஓபன் டாக்!

தமிழ்நாடு அணிக்காக விளையாடியது என் வாழ்நாள் சாதனை - முரளி விஜய் ஓபன் டாக்!

தொடர்ச்சியாக நான்கு முறை டக் அவுட் ஆன பிறகு தேர்வாளர்களிடம் என்னை அணியிலிருந்து நீக்கி, வேறொருவருக்கு வாய்ப்பு வழங்க கூறியதாக, தனது ஆரம்ப கால நாள்களை இந்திய அணியின் முன்னாள் வீரர் முரளி விஜய் நினைவு கூர்ந்துள்ளார்.

இந்திய கிரிக்கெட்டின் மிகச்சிறந்த டெஸ்ட் தொடக்க வீரர்கள் பட்டியலில் தமிழக வீரர் முரளி விஜயின் பெயர் எப்போதும் இருக்கும். இந்திய டெஸ்ட் அணிக்காக 2008ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரையிலும் விளையாடியுள்ள அவர், 61 டெஸ்ட் போட்டிகளில் 12 சதங்கள், 15 அரைசதங்கள் என 3,982 ரன்களைச் சேர்த்துள்ளார். பின்னர் காயம் காரணமாக அணியில் இடம் பிடிக்க தவறிய அவர், கடந்த 2023ஆம் ஆண்டு அனைத்து வடிவிலான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வை அறிவித்தார்.

தனது ஓய்வுக்கு பிறகு கோல்ஃப் விளையாட்டு, பயிற்சியாளர் மற்றும் கிரிக்கெட் வர்ணனையாளர் பணிகளை அவர் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், தருவார் கோலியின் யூடியூப் சேனல் நேர்காணலின் போது, உள்ளூர் போட்டிகளில் தமிழ்நாடு அணிக்காக விளையாட தேர்வானது குறித்து நினைவுக் கூறியுள்ளார். அதில் அவர், தான் தொடர்ச்சியாக ரன்களை சேர்க்க தவறிய போது, தேர்வாளர்களிடம் தன்னை அணியில் சேர்க்க வேண்டாம் என்று கூறியதையும் நினைவுக் கூர்ந்துள்ளது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இதுகுறித்து பேசிய முரளி விஜய், "உள்ளூர் போட்டிகளில் நாண் தமிழ்நாட்டு அணிக்காக விளையாடியது எனது வாழ்நாள் சாதனையாக பார்க்கிறேன். அணிக்காக அறிமுக தொப்பியை பெற்ற போது, நான் சாதனை படைத்ததாக உணர்ந்தேன். ஏனெனில் நான் 22 வயதுக்குட்பட்டவர்களுக்கான போட்டிகளின் போது தொடர்ச்சியாக நான்கு முறை டக் அவுட்டாகி வெளியேறினேன்.அதனால் நான் தமிழ்நாட்டு அணிக்காக விளையாடுவது, சாத்தியமில்லை என்று தோன்றியது" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "மேலும் என்னால் சரியாக விளையாட முடியாததுடன், தொழில்முறை கிரிக்கெட்டிற்கு நான் சரியான வீரர் என்ற நிலையை அனுபவிக்க முடியவில்லை. அதன் காராணமாக நான் சென்று தேர்வாளர்களிடம், தயவுசெய்து என்னை அணியில் இருந்து நீக்கிவிட்டு வேறு ஒருவருக்கு அந்த வாய்ப்பு கொடுங்கள் என்று கூறினேன். ஆனால் அவர்கள் என் மீது நம்பிக்கை வைத்து மீண்டும் வாய்ப்பு கொடுத்தனர். அதனை சரியாக பயன்படுத்தியதன் காரணமாக நான் சர்வதேச போட்டிகளில் விளையாடும் வாய்ப்பை பெற்றேன்" என்றார்.

இந்திய டெஸ்ட் அணிக்காக 2008ஆம் ஆண்டே முரளி விஜய் அறிமுகமானலும், கௌதம் கம்பீர், வீரேந்திர சேவாக் ஆகியோரால் அவருக்கு தொடர்ச்சியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதன்பின் 2021-13ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவருக்கு தொடர்ச்சியான வாய்ப்புகள் வழங்கப்பட்டது. அந்த தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய முரளி விஜய் அடுத்தடுத்து சதங்களை விளாசினார்.