ஆக்ரோஷமாக விரட்டிய யானை; வீட்டுக்குள் புகுந்து தப்பிய சிறுவன்

ஆக்ரோஷமாக விரட்டிய யானை; வீட்டுக்குள் புகுந்து தப்பிய சிறுவன்

கோயம்புத்தூரில் யானை ஆக்ரோஷமாக விரட்டியதை பார்த்த சிறுவன் சட்டென வீட்டுக்குள் புகுந்து தப்பிய வீடியோ வைரலாகி வருகிறது.

மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளை ஒட்டி 694 சதுர கி.மீ பரப்பளவில் கோவை வனக் கோட்டம் அமைந்துள்ளது. கோயம்புத்தூர் வனக்கோட்டத்தில் மதுக்கரை, போளுவாம்பட்டி, கோவை, பெரியநாயக்கன்பாளையம், காரமடை, மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகை ஆகிய 7 வனச் சரகங்கள் உள்ளன. இந்த பகுதிகளில் காட்டு யானை, புலி, சிறுத்தை, மான், காட்டு மாடுகள் போன்ற ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

குறிப்பாக 200-க்கு மேற்பட்ட காட்டு யானைகள் இருப்பதோடு, வலசை வரும் காட்டு யானைகளும் வந்து செல்கின்றன. மேலும் உணவு மற்றும் தண்ணீர் தேடி காட்டு யானைகள் வனப் பகுதிகளை ஒட்டி உள்ள கிராமங்களுக்குள் நுழைவது அடிக்கடி நடந்து வருகிறது.

அந்த வகையில் சமீப காலமாக காட்டு யானைகள் கிராமங்களுக்குள் நுழைவது அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக பயிர் சேதங்கள், மனித - யானை மோதல்கள் நடந்து வருகின்றன. எனவே, கிராமங்களுக்குள் நுழையும் யானைகளை கட்டுப்படுத்த வனத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கோவை மதுக்கரை வனப்பகுதியை ஒட்டிய சாந்தி நகரில் உள்ள சிந்து என்பவர் வீட்டிற்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை காட்டு யானை வந்துள்ளது. மதுக்கரை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய அந்த யானை சிந்துவின் வீட்டில் உள்ள வாழை, தென்னை மரங்களை சாப்பிட்டது. இதை பார்த்து அருகில் இருந்த வீட்டுக்காரர்கள் சிந்துவிற்கு போன் செய்துள்ளனர்.

இதையடுத்து கதவை திறந்து பார்த்து அதிர்ச்சி அடைந்த சிந்து உடனடியாக தனது செல்போன் மூலம் யானையை வீடியோ பதிவு செய்தார். அப்போது தோட்டத்தில் இருந்த வாழை, தென்னை ஆகியவற்றை சாப்பிட்ட யானை, பின்னர் எவ்வித சேதம் இன்றி மிக அழகாக காம்பவுண்ட் சுவரை தாண்டியது.

அப்போது தெருவில் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்த சிறுவனை யானை விரட்டியது. நல்வாய்ப்பாக சிறுவன் வீட்டிற்குள் புகுந்து உயிர் தப்பினார். இதையும் வீட்டின் உரிமையாளர் சிந்து வீடியோவாக எடுத்துள்ளார். தற்போது அந்த காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

கோயம்புத்தூரில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை கிராமத்திற்குள் நுழைந்து தோட்டத்தில் இருந்த வாழை, தென்னை ஆகியவற்றை சாப்பிட்ட பின்னர் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்த சிறுவனை ஆக்ரோஷமாக விரட்டிய சம்பவம் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.