டிரம்பை நம்பலாம்! நோபல் பரிசை கொடுத்து புகழ் பாடிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா!
வெனிசுலாவில் நிலவி வரும் அரசியல் நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியில், அந்த நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ, அமைதிக்காக தனக்கு அளிக்கப்பட்ட நோபல் பரிசை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உடன் பகிர்ந்துகொள்வதாக அறிவித்துள்ளார்.
வெனிசுலாவின் சுதந்திரத்திற்கான ட்ரம்பின் அர்ப்பணிப்பைப் அங்கீகரிக்கும் வகையில், தான் பெற்ற நோபல் பரிசை அவரிடம் கொடுத்ததாக மரியா செய்தியாளர்களிடம் தெரிவித்தார். தனக்கு மரியா அளித்த நோபல் பரிசை ‘கௌரவம்’ என்று குறிப்பிட்டு, தனது சமூக வலைத்தள பக்கத்தில் டிரம்ப் பதிவிட்டுள்ளார்.
இருப்பினும், ஒருவர் தனக்கு கிடைத்த நோபல் பரிசை மற்றொருவருக்கு பகிர்ந்தளிக்கவோ, கொடுக்கவோ முடியாது என நோபல் நிறுவனம் தடாலடியாக அறிவித்துள்ளது. மேலும், இது ‘சட்டப்பூர்வமானது அல்ல’ என விமர்சித்துள்ள நிறுவனம், மரியாவின் செயல்பாட்டுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
டிரம்பை நம்பலாம்
இரண்டு வாரங்களுக்கு முன்பு, அமெரிக்காவால் வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ சிறைபிடிக்கப்பட்டு நாடு கடத்தப்பட்டார். அதனைத் தொடர்ந்து வெனிசுலாவில் ஏற்பட்ட பெரும் அரசியல் மாற்றங்களுக்கு மத்தியில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
வெள்ளை மாளிகையில் டிரம்பை வெனிசுலாவின் எதிர்க்கட்சித் தலைவர் மரியா சந்தித்தார். டிரம்புடன் நடந்த சந்திப்பிற்குப் பிறகு, வெள்ளை மாளிகைக்கு வெளியே இருந்த தனது ஆதரவாளர்களிடம், ‘நாம் அதிபர் ட்ரம்பை நம்பலாம்’ என்று கூறினார்.
டிரம்ப் உடனான சந்திப்பிற்குப் பிறகு, அமெரிக்க செனட்டர்களின் குழுவை மரியா சந்தித்தார். இதனிடையே, வெனிசுலாவின் எரிசக்தித் துறையில் பிற நாடுகளின் முதலீடுகளை அனுமதிக்கும் தீர்மானத்திற்கு ஆதரவு அளிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்நிலையில், மதுரோவின் ஆட்சியை அகற்ற முக்கிய காரணங்களாகக் கூறப்பட்ட எரிசக்தி வர்த்தக சிக்கல்களை தீர்ப்பதாகக் கூறி, அமெரிக்காவுக்கு அடி பணிந்து டெல்சி செயல்படுவதாக மதுரோவின் ஆதரவாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். வெனிசுலாவின் எண்ணெய் வளங்களில் இருந்து கிடைக்கும் வருவாயை, உயரதிகாரத்தில் உள்ளவர்கள் அனுபவித்து வருவதாகவும், அவை மக்களுக்கு பயன்படும் வகையில் செலவிட வேண்டும் என்றும் டிரம்ப் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.