ஜெர்மனிக்கு பணியாளர்களின் தேவை அதிகமாக உள்ளது - சாக்ஸனி மாநில அமைச்சர் டிர்க் பான்டர்!
ஜெர்மனி நாட்டிற்கு திறமையான பணியாளர்களின் தேவை அதிகமாக உள்ளது என்று அந்நாட்டின் சாக்ஸனி மாநிலத்தின் பொருளாதாரம், எரிசக்தி, தொழிலாளர் மற்றும் காலநிலை மாற்றம் துறை அமைச்சர் டிர்க் பான்டர் தெரிவித்தார்.
சென்னையில் தென் இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை (SICCI) மற்றும் ஜெர்மனியின் சாக்ஸனி மாநில அரசு இணைந்து வணிக மாநாடு இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக சிறு, குறு நடுத்தர தொழில் துறை செயலாளர் அதுல் ஆனந்த், ஜெர்மனி சாக்ஸனி மாநில பொருளாதாரம், எரிசக்தி தொழிலாளர் காலநிலை மாற்றம் துறை அமைச்சர் டிர்க் பான்டர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த உயர்மட்ட மாநாடு தமிழ்நாடு மற்றும் சாக்ஸனி இடையிலான தொழில்துறை, புதுமை, தொழில்நுட்ப பரிமாற்றம் மற்றும் சிறு, குறு தொழில் நிறுவனங்களிடையே கூட்டாண்மையை வலுப்படுத்த உள்ளது. மாநாட்டில் ஜெர்மனியை சேர்ந்த 16 நிறுவனங்கள் 200-க்கு மேற்பட்ட தொழில் துறை பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
மாநாட்டில் சிறு, குறு, நடுத்தர தொழில்துறை செயலாளர் அதுல் ஆனந்த் பேசுகையில், ''தமிழ்நாடு 11 சதவீதம் பொருளாதார இலக்கை எட்டி உள்ளது. 62,000 தொழில் நிறுவனங்களுக்கு 2 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் அனுமதி கொடுக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக ஒற்றை சாளர முறையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மரபு சாரா எரிசக்தி, காற்றாலை மின்சாரம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு தமிழகத்தில் தொழில் துறைக்கு வானமே எல்லையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியைச் சேர்ந்த தொழில் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய முன் வர வேண்டும்'' என, அவர் அழைப்பு விடுத்தார்.
சென்னை மற்றும் கோயம்புத்தூர் நகரங்களை மேலும், ஆராய்வதற்கு நான் ஆவலாக இருக்கிறேன். இந்த பயணம் நீண்டகால ஒத்துழைப்புக்கு வழி வகுக்கும் என நான் நம்புகிறேன். எங்கள் பயணத்தின் முக்கிய நோக்கம் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் திறமையான பணியாளர்களை கண்டறிவதாகும். நான் இதுவரை பார்த்த வரையில் இந்தியா இளம் மற்றும் புதுமையான நாடாக வளர்ந்து வருகிறது. அதற்கு எனது வாழ்த்துகள்.
விஞ்ஞான ஒத்துழைப்பில் சாக்ஸனி மற்றும் சென்னை இடையே ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இது மாணவர் பரிமாற்றம், ஆராய்ச்சி ஒத்துழைப்பு மற்றும் ஸ்டார்ட்- ஆப் நிறுவனங்களுக்கு நல்ல தளத்தை அமைத்து உள்ளது. தற்போதைய புவிசார் அரசியல் சூழலில், வலுவான விநியோகச் சங்கிலிகள் மற்றும் பாதுகாப்பு ஆகியவை முக்கியத்துவம் பெறுகின்றன. ஜனநாயக பங்காளிகளுடன் ஒத்துழைப்பு எங்களுக்கு மிகவும் முக்கியம். அதில் இந்தியா மிகவும் முக்கியமான பங்களிப்பை அளிக்கிறது.
இந்தியா ஏற்கனவே உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாக உள்ளது. விரைவில் இந்தியா ஜெர்மனியை முந்தி விடும். இதை நாங்கள் வரவேற்கிறோம். ஏனெனில் நாம் ஒன்றாக வளர விரும்புகிறோம். சாக்ஸனியுடனான வர்த்தகத்தில் இந்தியா 13-வது இடத்தில் உள்ளது. இந்த நிலையில் முன்னேற்றம் காண அதிக வாய்ப்புள்ளது. உங்களில் சிலருக்கு சாக்ஸனியை பற்றி தெரிந்திருக்கலாம். சாக்ஸனி ஒரு நீண்ட பாரம்பரியத்தை கொண்டுள்ளது.
200 ஆண்டுகளுக்கு முன்பு, ஐரோப்பாவில் இயந்திரப் பொறியியலின் தொட்டிலாக சாக்ஸனி திகழ்ந்தது. கடந்த 35 ஆண்டுகளில் மீண்டும் வணிகம் மற்றும் ஆராய்ச்சிக்கான ஒரு கவர்ச்சிகரமான இடமாக மாறியுள்ளது. உற்பத்தித் திறன் வாய்ந்த பொருளாதார துறைகள் வாகன தொழில், இயந்திரப் பொறியியல், மைக்ரோ எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பம் ஆகியவை முக்கியமாக உள்ளன.
சாக்ஸனியின் பலமும், தமிழ்நாட்டின் பலமும் நல்ல பொருத்தமாக இருக்கும். அதனால் தான் தமிழ்நாட்டுடன் கூட்டாண்மையில் ஆர்வமாக உள்ளோம். இந்த தொழில்துறை சந்திப்பின் மூலம் புதிய நல்ல தொடர்புகள் அமையும்'' என்றார்.
இதை தொடர்ந்து அமைச்சர் டிர்க் பான்டர் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், ''தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவை நேற்று சந்திதேன். தமிழகத்துடனான எங்களது உறவை தொடர்ந்து வலுப்படுத்த திட்டமிட்டுள்ளோம். புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதுடன் உறுதியான திட்டங்களில் பணியாற்ற விரும்புகிறோம். அதற்காக மைக்ரோ எலெக்ட்ரானிக்ஸ், செமிகண்டக்டர்கள், திறமையான பணியாளர்களில் கவனம் செலுத்தி வருகிறோம். ஜெர்மனி நாட்டிற்கு திறமையான பணியாளர்களின் தேவை அதிகமாக உள்ளது.
மைக்ரோ எலெக்ட்ரானிக்ஸ், செமிகண்டக்டர்கள் என 2 துறைகளிலும் ஒத்துழைக்க தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவை போலவே சாக்சனியில் ஜவுளி தொழிலுக்கு நீண்ட பாரம்பரியம் உள்ளது. இதையொட்டி சென்னை மற்றும் கோயம்புத்தூரில் உள்ள பல்வேறு ஜவுளி ஆலைகளை பார்வையிட்டு புதிய வணிக வாய்ப்புகளை கண்டறியவுள்ளோம்.
ஜெர்மனியில் டிரெஸ்டன் மற்றும் ப்ரைபெர்க்கில் உள்ள தொழில்நுட்ப பல்கலைக்கழகங்கள், சென்னை ஐஐடியுடன் இணைந்து மைக்ரோ எலெக்ட்ரானிக்ஸ், செமிகண்டக்டர் துறையை மேம்படுத்த விரும்புகிறோம். சென்னை ஐஐடியும், டிரெஸ்டன் தொழில்நுட்ப பல்கலைக்கழகமும் காப்புரிமை மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை செய்து வருகிறது.
தமிழகம்-சாக்ஸனி இடையே உள்ள ஒப்பந்தங்களின்படி பரிமாற்ற திட்டத்தில் சில நூறு மாணவர்கள் உள்ளனர். அவற்றை ஆயிரக்கணக்கில் உயர்த்த விரும்புகிறோம். நாங்கள் ஜெர்மனியில் ஒரு சிறிய மாநிலம். எங்களுடன் உறவுகள் சரியாக உள்ள இடமான தமிழகம் சிறந்த தேர்வு என்று நினைக்கிறோம்'' என்று கூறினார்