இஸ்ரேல்-ஹமாஸ் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படுமா? உச்சபோரின் இரண்டாம் ஆண்டை நினைவுகூரும் உலகத் தலைவர்கள்!

இஸ்ரேல்-ஹமாஸ் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படுமா? உச்சபோரின் இரண்டாம் ஆண்டை நினைவுகூரும் உலகத் தலைவர்கள்!

காஸா மீதான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமெரிக்காவின் சமாதானப் பேச்சுவார்த்தை திட்டம் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

இதுதொடர்பாக எகிப்தின் ஷர்ம் எல்-ஷேக்கில் மறைமுகப் பேச்சுவார்த்தை இன்று நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் பிடித்துவைத்துள்ள பணயக் கைதிகளை இருதரப்பிலிருந்தும் விடுவிக்க முடிவு எடுக்கப்படும் என உயர்நிலைக்குழு அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, ஹமாஸ் பணயக் கைதிகளை படிப்படியாக விடுதலை செய்வோம் என இஸ்ரேல் வாக்குறுதி கொடுத்திருந்தது. இதனால், சமாதானப் பேச்சுவார்த்தைக்கு உடன்பட்டு, தாங்களும் பணயக் கைதிகளை விடுதலை செய்வதாக ஹமாஸ் அறிவித்திருந்தது.

சமாதானப் பேச்சுவாத்தையில், ஹமாஸ் ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும் என்று இஸ்ரேல் கோரி இருக்கிறது. மேலும், காசா அதிகாரத்தில் இஸ்ரேலின் பங்கு இருக்கக்கூடாது என ஹமாஸ் வலியுறுத்தி வரும் நிலையில், அதற்கு இன்னும் உடன்பாடு எட்டப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பேச்சுவார்த்தையில் தொய்வு ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில், காஸாவின் ஹமாஸ் நிலைகள் மீது இஸ்ரேல் தாக்குதலைத் தொடர்ந்தது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் காஸாவில் 19 பேர் கொல்லப்பட்டதாக பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

இப்படி இருநாடுகளுக்கு இடையில் பதற்றமான சூழல் நிலவும் நேரத்தில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு மதிப்பளிக்கும் விதமாக, இஸ்ரேல், பாலஸ்தீன் ஆகிய இரு நாடுகளின் பிரதிநிதிகளுடன், எகிப்திய மற்றும் கத்தார் அதிகாரிகள் இன்று சந்திப்புகளை நடத்துகின்றனர்.

2023-ஆம் ஆண்டின் அக்டோபர் 7 இதே நாளில், தெற்கு இஸ்ரேல் மீது ஹமாஸ் அதிரடியாக தாக்குதல் நடத்தியது. இதில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டு, 251 பேர் பிணைக்கைதிகளாக பிடிக்கப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேலிய ராணுவம் காஸாவில் தாக்குதலைத் தொடங்கியது.

இஸ்ரேல் ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலில் சுமார் 18,000 குழந்தைகள் உள்பட 67,160 பேர் கொல்லப்பட்டனர். இந்த மோசமான நிகழ்வு உலக மக்களை நிலைகுலைய செய்திருந்தது.

அந்நாளை நினைவுகூரும் தினமான இன்று, "டிரம்பின் சமாதானப் பேச்சுவாத்தைத் திட்டம், இந்த துயரமான மோதலை முடிவுக்குக் கொண்டுவர ஒரு வாய்ப்பை வழங்குகிறது,” என ஐ.நா பொதுச் செயலாளர் அண்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்துள்ளார்.

எகிப்து அதிபர் அப்தெல்-ஃபத்தா எல்-சிசி, டிரம்பின் முயற்சிகளைப் பாராட்டியுள்ளார். 1970-களில் இருந்து மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்கா வடிவமைத்த "அமைதி அமைப்பை" பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை அவர் அடிக்கோடிட்டு காட்டியுள்ளார்.