‘காசாவில் இடிந்த கட்டிடங்களில் 10,000+ உடல்கள்...’ - உலுக்கும் மீட்பு அனுபவம்

‘காசாவில் இடிந்த கட்டிடங்களில் 10,000+ உடல்கள்...’ - உலுக்கும் மீட்பு அனுபவம்

இஸ்ரேல் படைகளின் பல்வேறு உக்கிரமான தாக்குதல்களினால் காசாவில் இடிந்து விழுந்த கட்டிட இடிபாடுகளில் 10,000-க்கும் அதிகமான உடல்கள் சிக்கியிருக்கின்றன என்றும், அவற்றை மீட்பது சாதாரணக் காரியமல்ல என்றும் காசாவின் குடிமைப் பணியாளர்கள் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளனர். 

காசா நகரின் கிழக்குப் பகுதியான அல்-சாஹா அருகே செப்டம்பர் 17 அன்று நடந்த பணிதான் நூஹ் அல்-ஷக்னோபிக்கு அதிகம் துன்பம் தருகிறது. இஸ்ரேல் படைகள் ஒரு வீட்டை குண்டுவீசி, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோரை கொன்று குவித்தது.  அவர்களில் பெரும்பாலோரின் உடல்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்தன.

அல்-ஷக்னோபியின் குழு இரண்டு சிறுமிகளின் உடல்களை வெளியே எடுத்ததும் தொடர்ந்து தோண்டினர்; அவர்கள் இடிந்து விழுந்த தரைத் தளங்களின் கீழ் ஊர்ந்து சென்று உடல்களை மீட்க, யாரேனும் உயிருடன் இருந்தால் அவர்களைக் காப்பாற்றவும் கடும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். 

நூஹ் அல் ஷக்னோபி ‘இன்டெர்செப்ட்’ ஊடகத்திற்குக் கூறும்போது, “யாரேனும் உயிருடன் இருப்பதாக நம்பிக்கை இருந்தால்தான் கீழே செல்வோம், இல்லையெனில் மேலிருந்து கீழ் நோக்கித் தோண்டுவோம். அதன்பிறகு நாங்கள் கண்டது பயங்கரமானதொரு கனவை விடவும் கொடூரமான நிஜம்” என்றார். 

இடிபாடுகளுக்குள் 12 மீட்டர் அவர்கள் நடந்தனர். இடிபாடுகள் நெடுக உடைந்த கால்கள், கைகள், தாயின் உடல் அதை இறுக அணைத்து இறந்துபோன குழந்தை என்று உடல்கள் அருகே குடிமைப் பணியாளர்கள் ஊர்ந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த அனுபவம் குண்டுவீச்சுத் தாக்குதலின் தாக்கத்தை அவர்களுக்கு உணர்த்தியது. இடிபாடுகளின் ஆழத்திலிருந்து ஒரு சிறுமி ‘நான் இங்கே... நான் இங்கே’ என்று ஈனமாக முனகுவதும் அவர்களுக்குக் கேட்டது. அந்தச் சிறுமியைக் காப்பாற்றினர். 

இரண்டு ஆண்டுகள் நீடித்த தாக்குதல்களுக்குப் பிறகு, காசா குடிமைப் பாதுகாப்பு படையில் சுமார் 900 பணியாளர்கள் மட்டுமே உள்ளனர்; அதன் செயல்திறன் 90% குறைந்துவிட்டதாகத் தெரிவித்தனர். கனரக இயந்திரங்கள் இல்லாத சூழலில், அவர்கள் சுத்திகள், கோடரிகள், கரணைகள் போன்ற எளிய கருவிகளையே பயன்படுத்துகின்றனர். ஓர் உடலை மீட்பதற்கே பல நாட்கள் ஆகிறது என்கின்றனர். 
இடிபாடுகளுக்கு இடையில் 10,000-க்கும் அதிகமான உடல்கள் கிடக்கலாம் என்று அவர்கள் கூறுகின்றனர். அவர்களை இந்த வேதனையான பணியில் ஊக்கப்படுத்துவது என்னவெனில், இடிபாடுகளிலிருந்து ஒரு குரல், ஓர் உயிரின் சத்தம் கேட்டால் போதும் அவரைக் காப்பாற்ற இவர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைப்பதே. 

24 வயதான அல்-ஷக்னோபி ஏற்கெனவே 7 ஆண்டுகளாக காசா குடிமைப் பாதுகாப்பில் பணியாற்றுகிறார். அவரின் வீடு தல்அல்-ஹவ்வா பகுதியில் அழிக்கப்பட்டு, குடும்பம் தெற்கில் இடம்பெயர்ந்து வாழ்கிறது. போர் நிறுத்தம் வந்தால் மக்கள் மூச்சு விடலாம் என்கிறார் அல்-ஷக்னோபி, ஆனால், இவர்களைப் போன்ற பணியாளர்களுக்கோ போர் முடிந்த பிறகுதான் போரே தொடங்குகிறது. அதாவது உடல்களை மீட்பது. 

போரில் இறந்த தன் அத்தையின் உடலும் இந்த 10,000 உடல்களில் ஒன்றாக இருக்கலாம் என்கிறார் ஷக்னோபி. இஸ்ரேல் தாக்குதலில் தீவிரமாக பாதிக்கப்பட்ட ஷுஜாயா, ரஃபா உட்பட பல பகுதிகள் இன்னும் அணுக முடியாதவையாக உள்ளன. இஸ்ரேலி படைகள் அப்பகுதிகளை ‘யெல்லோ ஸோன்’ என்று கூறி மீட்புக்குழுவுக்கு அனுமதி மறுத்துள்ளது. 

“இந்த இடைக்கால போர் நிறுத்தத்தின்போது சில உடல்களை மட்டுமே மீட்டோம்,” என்றார் அல்-ஷக்னோபி. “எங்களுக்கு இயந்திரங்கள் இல்லை. சில இடங்களில் நூற்றுக்கணக்கானோர் இடிபாடுகளுக்குள் இருப்பதை அறிந்திருந்தும் செல்ல முடியவில்லை” என்றார் அவர்.

இந்த மீட்புப் படையைச் சேர்ந்த மற்றொரு வீரரான 25 வயதான அல் கம்மாஷ் கூறும்போது, குரல் “கேட்கிறது, ஆனால் இடுபாடுகளுக்குள் செல்ல முடியாமல் போய் அவரைக் காப்பாற்ற முடியாமல் போனால் கடும் வேதனைதான் ஏற்படுகிறது” என்றார். “ஒரு பணிக்கு அனுப்பப்பட்டால் அதை நான் முழுமையாக முடிக்க வேண்டும் என்ற பொறுப்பு எனக்குண்டு” என்றார் அவர். 

சுவர் அல்லது மாடியின் கீழ் சிக்கியிருந்தால் ஓர் உடலை மீட்பதற்கே 10-12 மணி நேரங்கள் ஆகும். “சில நேரங்களில் கனரக கருவிகள் தேவைப்படுவதால் மீட்க முடியாமலே கூட போகும்” என்றார். 

இந்த இஸ்ரேலிய தாக்குதல் தன்னை உணர்ச்சியற்ற மரக்கட்டையாகவே மாற்றி விட்டது என்கிறார் அல் ஷக்னோபி, “போரின் தொடக்கத்தில் உடல்களை பார்க்கவே முடியவில்லை. கண்களை மூடிக்கொண்டுதான் உடல்களை மீட்கிறோம். வெள்ளைத் துணிகளில் உடல்களை எடுத்து வந்தோம். அந்த உடல்கள் மிகவும் நொய்மையாகிவிட்டதால் தொடக் கூட மனம் வரவில்லை” என்று வேதனையுடன் கூறுகிறார் ஷக்னோபி. 

உடல்கள் பலவிதம்... அழுகிய நிலையில் கிடக்கும், கை, கால் மற்றும் சிதறிய உடல் உறுப்புகள், எரிந்த உடல்கள், எலும்புக் கூடுகள் வெறும் மண்டை ஓடுகள் என்று ஆங்காங்கே இடிபாடுகளில் கிடக்கின்றன. சூரிய ஒளியில் உடல்கள் வேகமாக அழுகுவதால் அருகில் செல்ல முடியாத அளவுக்கு துர்நாற்றம் என்று குடிமைப் படையின் வீரர்கள் தெரிவித்துள்ளனர். 

டி.என்.ஏ சோதனைகள் இல்லை என்பதால் உறவினர்கள் உடலை அடையாளம் காண முடியாமல் தவிக்கின்றனர். உடைகள், காலணிகள், மோதிரங்கள், அடையாள அட்டைகள் போன்றவற்றைத் தான் அடையாளமாக பயன்படுத்துகிறார்கள். அடையாளம் தெரியாத உடல்கள் பெயரில்லா கல்லறையில் அடக்கம் செய்யப்படுகின்றன.

குடும்பங்கள் அருகில் காத்திருக்கும்போது, அவர்கள் வெளியே கொண்டுவரும் உடலைக் கண்டு மீளாத துயரம் வெடிக்கிறது. இந்த பணியாளர்கள் தங்கள் சொந்த குடும்பங்களே தாக்குதலால் பாதிக்கப்பட்ட சூழலில் இந்த பயங்கர பணியை செய்து வருகின்றனர். 

இந்தக் கடினமான பணியை எது அவர்களைச் செய்ய உத்வேக மூட்டுகிறது என்றால், உயிருடன் இருப்பவர்களை மீட்கலாம் என்பதே என்கின்றனர் கடினமான வேலையில் ஈடுபட்டுள்ள காசா குடிமைப் பணியினர். இன்னமும் மரணமடைந்தவர்களின் உடலுக்காகவும் இறுதிச் சடங்கு செய்யவும் மக்கள் காத்திருக்கின்றனர். 

மேலும் பலர் காணாமல் போன தங்களது மகனோ, மகளோ, சகோதரனோ, சகோதரியோ எங்கேயோ இருப்பார்கள் என்ற நம்பிக்கையிலும் எங்கிருந்தாவது குடிமை பணியினரால் மீட்டெடுக்கப்பட்டு உயிருடன் திரும்பி வருவார்கள் என்றும் நம்பிக்கையிலும் காசா மக்கள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர்.