ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவும் 5 சைவ உணவுகள்!
உடலின் ஆரோக்கியத்திற்கும் ஆற்றலுக்கும் இன்றியமையாத புரதமான ஹீமோகுளோபின் ரத்த சிவப்பணுக்களில் உள்ளது. நுரையீரல் இருந்து ஆக்ஸிஜனை உடலின் அனைத்து செல்கள் மற்றும் உறுப்புகளுக்கும் எடுத்துச் சென்று, அவை சரியாக இயங்குவதற்கும், ஆற்றலை உற்பத்தி செய்வதற்கும் ஹீமோகுளோபின் உதவுகிறது.
அதே சமயம், கழிவுப்பொருளான கார்பன் டை ஆக்சைடை மீண்டும் நுரையீரலுக்குக் கொண்டு வந்து வெளியேற்றவும் இது உதவுகிறது. எனவே, சோர்வு, பலவீனம் மற்றும் தலைசுற்றலைத் தவிர்க்க உடலுக்குப் போதுமான ஹீமோகுளோபின் அளவு அவசியம். இது வளர்ச்சி, குணமடைதல் மற்றும் நோய் எதிர்ப்புச் சக்திக்கும் உதவுகிறது.
ஹார்வர்ட் மருத்துவப் பள்ளியின் கூற்றுப்படி, வயது வந்த ஆண்களுக்கு நிலையான ஹீமோகுளோபின் அளவு 13.0 முதல் 18.0 கிராம்/டெசிலிட்டர் (g/dL) வரையிலும், பெண்களுக்கு 12.0 முதல் 16.0 g/dL வரையிலும் இருக்க வேண்டும். ஆண்களை விட பெண்கள் தான் ரத்த சோகை பிரச்சனையை அதிகம் அனுபவிக்கின்றனர். அந்த வகையில், ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவும் உணவுகள் சிலவற்றை தெரிந்து கொள்ளலாம்.
சிகப்பு கீரை: சிகப்பு கீரையில் இரும்புச்சத்து, ஃபோலேட் மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இவை ரத்த சிவப்பணுக்கள் உற்பத்தியை ஆதரிக்கின்றன. ஒரு ஆய்வின்படி, கர்ப்பிணிப் பெண்களுக்கு லேசான ரத்த சோகை இருக்கும்போது, சிகப்பு கீரை சாற்றைக் குடிப்பதால் ஹீமோகுளோபின் அளவு கணிசமாக அதிகரிப்பதாக The Effect of Red Spinach Juice on Hemoglobin Levels in Pregnant Women: A Randomized Controlled Trial என்ற தலைப்பில் வெளியான ஆய்வில் தெரியவந்துள்ளது. சிகப்பு கீரையை வதக்கி அரைத்து சப்பாத்தி மாவில் கலந்து சாப்பிடலாம். கூட்டு பொரியல் அல்லது சாலட்களில் சேர்த்தும் உட்கொள்ளலாம்.
பீட்ரூட்: பீட்ரூட் ரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியைத் தூண்டி, ரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதாக கூறப்படுகிறது. ஒரு ஆய்வு, தினமும் இரண்டு முறை பீட்ரூட் ஜூஸ் உட்கொள்வது 3 வாரங்களுக்குள் ஹீமோகுளோபின் அளவை கணிசமாக அதிகரிப்பதாக Effect of Beetroot Juice on Anaemic Patients -an Analytical Study என்ற தலைப்பில் வெளியான ஆய்வுக்கட்டுரையில் தெரியவந்துள்ளது. பீட்ரூட்டை துருவி தயிர் சேர்த்து உட்கொள்ளலாம். அல்லது ஜூஸ், சூப் போன்று செய்யலாம்.
மாதுளை: மாதுளைப்பழம் வைட்டமின் சி, இரும்புச்சத்து மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிரம்பியது. இவை ஹீமோகுளோபின் அளவை மேம்படுத்துகின்றன. தினமும் 500 மில்லி மாதுளை ஜூஸ் குடிப்பதால், ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை, ஹீமோகுளோபின் செறிவு மற்றும் ஹீமாடோக்ரிட் அளவுகள் கணிசமாக அதிகரிப்பதாக NCBI ஆய்வு கூறுகிறது. பழமாக, ஜூஸ் ஆக, அல்லது சாலட்களில் சேர்த்து சாப்பிடலாம்.
பயறு வகைகள்: பருப்பு வகைகள், கொண்டைக்கடலை மற்றும் பீன்ஸ் போன்ற பயறு வகைகளில் இரும்புச்சத்து, புரதம் மற்றும் ஃபோலேட் நிறைந்துள்ளதால், அவை ஹீமோகுளோபினை மேம்படுத்த சிறந்தவை. செறிவூட்டப்பட்ட பருப்பு வகைகளை (fortified lentils) உட்கொள்வது ஹீமோகுளோபின் அளவை அதிகரிப்பதாக 2023 ஆம் ஆண்டு வெளியான NCBI ஆய்வு ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது. வேக வைத்தோ அல்லது, குழம்பு, கூட்டு செய்து எடுத்துக்கொள்ளலாம்.
நட்ஸ் மற்றும் விதைகள்: பாதாம், பூசணி விதைகள், எள் போன்ற நட்ஸ் மற்றும் விதைகளில் இரும்பு, தாமிரம் மற்றும் பிற தாதுக்கள் நிறைந்துள்ளன. இவை ஹீமோகுளோபின் உருவாக்கத்திற்கு முக்கியமானவை. 100 கிராம் பிஸ்தாவில் 3.9 மி.கி இரும்புச்சத்தும், முந்திரியில் 6.7 மி.கி இரும்புச்சத்தும், பாதாமில் சுமார் 5.4 மி.கி இரும்புச்சத்தும் உள்ளது.
இவற்றைத் தொடர்ந்து உட்கொள்வது ஹீமோகுளோபின் அளவை இயற்கையாக மேம்படுத்த உதவுகிறது. இவற்றை வறுத்து அதன் தன்மையிலே சாப்பிடலாம் அல்லது இரவில் ஊறவைத்து காலையில் அரைத்து ஸ்மூத்தி செய்து எடுத்துக்கொள்ளலாம்.