9 நிமிடத்திற்குள் மாயமான பெண் - போலீசாருக்கு ஆட்சியர் பிறப்பித்த அதிரடி உத்தரவு
தேநீர் வாங்க சென்ற மன வளர்ச்சி குன்றிய இளம் பெண் காணாமல் போன விவகாரத்தில், காவல் துறை உடனடியாக நடவடிக்கை எடுத்து பெண்ணை கண்டுபிடிக்குமாறு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் சமாதானபுரம் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் பண்டிதர் - மகேஸ்வரி தம்பதியினருக்கு நான்கு பிள்ளைகள் உள்ளனர். இதில் ஒரு ஆண், ஒரு பெண் என இரு பிள்ளைகள் மன வளர்ச்சி குன்றியவர்களாக இருந்துள்ளனர்.
இதனிடையே, மகேஸ்வரிக்கு மதுரை செல்லூரில், மாநகராட்சி தூய்மைப் பணியாளராக பணி கிடைத்ததால், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மதுரை கூடல்புதூர் காவல் நிலைய எல்கைக்குட்பட்ட, புதுவிளாங்குடி யூனியன பேங்க் ஒன்றாவது தெரு பகுதியில், வாடகைக்கு வீடு எடுத்து குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த 45 நாட்களுக்கு முன்பு ஆறுமுகம் பண்டிதர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இதனையடுத்து, மகேஸ்வரி தனது தாயார் சூரியகலா, இரு மகன்கள் மற்றும் மனவளர்ச்சி குன்றிய மகளான வீரலெட்சுமி (எ) ராசாத்தி (25) ஆகியோருடன் வசித்து வந்தார்.
இந்த சூழலில், ஜனவரி 14 அன்று, அதிகாலை 5 மணியளவில் வீரலெட்சுமி தனது வீட்டின் அருகே உள்ள தேநீர் கடைக்கு ‘டீ’ வாங்குவதற்காக சென்றுள்ளார். டீ வாங்கி விட்டு குறிப்பிட்ட நேரத்திற்கு பின்னரும் வீரலெட்சுமி வீடு திரும்பாததால், தாயார் மற்றும் பாட்டி ஆகிய இருவரும் கடைக்கு சென்று விசாரித்துள்ளனர்.
அப்போது, வீரலெட்சுமி டீ வாங்கி விட்டு சென்று விட்டதாக கடையில் இருந்த பணியாளர் கூறியுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த இருவரும் பதறியபடி, அந்த பகுதி பொதுமக்களுடன் இணைந்து சுற்றுவட்டார பகுதிகளில் தேடியுள்ளனர்.
ஆனால், நீண்ட நேரம் தேடிப் பார்த்தும், வீரலெட்சுமி கிடைக்காத நிலையில், மதுரை கூடல்புதூர் காவல்நிலையத்திற்கு சென்று தாயார் மகேஸ்வரி புகார் அளித்துள்ளார். அப்போது அங்கிருந்த காவல் துறையினர் விவரங்களை கேட்டதோடு, வீரலெட்சுமியின் புகைப்படம் மற்றும் விவரங்கள் குறித்து நோட்டீஸ் போன்று தயார் செய்து, அதனை நகல் எடுத்து கேட்டுள்ளனர். பின்னர் நீங்களே உங்களது பகுதிகளில் நோட்டீஸ் ஒட்டி தேடுங்கள் என கூறியதாக தெரிகிறது.
அதனைத் தொடர்ந்து, வீரலெட்சுமியின் தாயாரும், பாட்டியும் வீடு வீடாக சென்று தேடியுள்ளனர். இதையடுத்து, அவ்வப்போது கூடல்புதூர் காவல் நிலையத்திற்கு சென்று தனது குழந்தையை கண்டுபிடித்து தருமாறு கேட்டுள்ளனர். அப்போது அங்கிருந்த காவல் துறையினர், முதலமைச்சரின் பாதுகாப்பு பணியில் இருப்பதாகக் கூறி தாமதித்து வந்துள்ளனர். இன்றும் காவல் நிலையத்தில் கேட்ட போது தேடிக் கொண்டிருக்கிறோம் என பதிலளித்துள்ளனர்.
ஆட்சியர் அதிரடி உத்தரவு
இந்த நிலையில் காவல் துறையினரின் செயல்பாடு குறித்து அதிருப்தி அடைந்த வீரலெட்சுமியின் தாயார் மற்றும் பாட்டி ஆகியோர் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமாரை சந்தித்து இது தொடர்பாக மனு அளித்தனர். இதனையடுத்து காவல்துறையினரை தொடர்பு கொண்ட மாவட்ட ஆட்சியர், இளம்பெண் காணாமல் போனது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மகேஸ்வரியின் தாயார் சூரியகலா, “கடந்த 14-ஆம் தேதி வீட்டின் அருகில் உள்ள டீக்கடைக்கு சென்ற மன வளர்ச்சி குன்றிய எனது பேத்தி சில நிமிடங்களில் காணாமல் போய் விட்டார். ஆனால், காவல்துறையினரிடம் புகார் அளித்தால் நீங்களே தேட வேண்டுமென கூறி அனுப்பி வைத்தனர்.
இதனால், நாங்களே சிசிடிவி கேமராக்கள் உள்ளிட்ட ஆதாரங்களை எல்லாம் கொடுத்தும் கூட, காவல்துறையினர் என் பேத்தியை கண்டுபிடிக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை. மேலும், முதலமைச்சரின் பாதுகாப்பு பணிகள் இருப்பதாக கூறி, தொடர்ந்து தாமதப்படுத்திய நிலையில் 6 நாட்களாக எங்களது பிள்ளையை காணாமல் தவித்து வருகிறோம்.
எனவே, காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து, காணாமல் போன என் பேத்தியை கண்டுபிடிக்க உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்,” என்று கண்ணீர் மல்க தெரிவித்தார்.