நாய்களை அடித்துக் கொன்று தூக்கி வீசிய வடமாநில தொழிலாளி மீது வழக்குப்பதிவு
இரண்டு நாய்களை அடித்து கொலை செய்து மூன்றாவது மாடியில் இருந்து கீழே தூக்கி வீசிய வடமாநில தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
தாம்பரத்தை அடுத்த சேலையூர் வேங்கைவாசல் சிவபூஷணம் நகர் ஆறாவது தெருவில் மூன்று அடுக்கு கொண்ட அடுக்குமாடி கட்டடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. அதில் வட மாநிலத் தொழிலாளர்கள் கட்டுமான பணிகள் ஈடுபட்டுள்ளனர். அப்போது, கட்டடத்தின் மேல்தளத்திற்கு சென்ற வட மாநில தொழிலாளி ஒருவரை இரண்டு நாய்கள் கடிக்க பாய்ந்துள்ளன.
இதனால் ஆத்திரமடைந்த கட்டுமான தொழிலாளி அங்கு இருந்த இரும்பு கம்பியால் இரண்டு நாய்களையும் பலமாக தாக்கி ஒரு நாயை கம்பியால் குத்தி தூக்கி மூன்றாவது மாடியில் இருந்து கீழே வீசியுள்ளார். மேலும் மற்றொரு நாயை அடித்து கோணிப் பையில் போட்டு அதையும் மூன்றாவது மாடியில் இருந்து கீழே தூக்கி வீசி உள்ளார். இதனால் இரண்டு நாய்களும் உயிரிழந்துள்ளன.
இதனை அந்த புதிய கட்டடம் அருகே உள்ள வீடுகளில் இருந்த சிலர் செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவு செய்தனர். இதனைப் பார்த்த விலங்குகள் நல பாதுகாப்பு செயற்பாட்டாளர் விக்னேஷ் என்பவர் சம்பவ இடத்திற்கு சென்று சேலையூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற சேலையூர் போலீசார் வீடியோ காட்சிகள் ஆதாரத்தை வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து நாயை கொடுரமாக தாக்கிய கட்டுமான தொழிலாளியின் மீது BNS 325 என்ற பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
விசாரணையில் அவர் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ராம் ஜுல்பிகர் என தெரிய வந்தது. இதனையடுத்து, காவல் துறையினர் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதேபோல் கடந்த வாரம் சென்னை மயிலாப்பூர் பகுதியில் டீ கடைக்கு வரும் நபர்களை கடிக்க முற்பட்ட தெரு நாய் ஒன்றை டீக்கடை உரிமையாளர் மோகன் என்பவர் கட்டையால் அடித்துக் கொன்ற காட்சிகள் வெளியான நிலையில் அவரை மயிலாப்பூர் போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.