‘எப்படி நல்லா இருக்கும்?’ - மதுரை திமுகவினரை மடக்கிக் கேட்ட ஸ்டாலின்

‘எப்படி நல்லா இருக்கும்?’ - மதுரை திமுகவினரை மடக்கிக் கேட்ட ஸ்டாலின்

தேர்தல் பரபரப்புகளுக்கு மத்தியில், ‘உடன்பிறப்பே வா’ சந்திப்புக்காக அறிவாலயம் வந்து திமுக தலைவரை சந்தித்த மதுரை உடன் பிறப்புகள், “மேயர் இந்திராணியை மாற்றாவிட்டால் சிக்கலாகும்” என்று மதுரை மேயருக்கு எதிராக புகார் மழை பொழிந்துவிட்டுப் போயிருக்கிறார்கள்.

முதல்வரைச் சந்தித்து மதுரை நிலவரத்தை முறையிட்ட திமுக நிர்வாகிகள் தரப்பில் சிலரிடம் பேசினோம். “இந்த சந்திப்பின் போது மதுரை மாநகர பகுதிச் செயலாளர் ஒருவரிடம் தலைவர் ஸ்டாலின் மாநகராட்சி நிர்வாகத்தின் செயல்பாடு குறித்து கேட்டிருக்கிறார். அவர், எதற்கு பொல்லாப்பு என நினைத்து, ‘மதுரை மாநகராட்சி நிர்வாகம் சிறப்பா செயல்படுது தலைவரே’ என்று சொல்லி இருக்கிறார்.

அதைக் கேட்டு குத்தலாகச் சிரித்த ஸ்டாலின், ‘எப்படி நல்லா இருக்கும்... உங்க மேயரோட கணவர் தான் ஒட்டுமொத்த மதுரையையும் கெடுத்து வெச்சிருக்கிறாரே?’ என்று கேட்கவும், பதறிப்போன பகுதிச் செயலாளர், ‘ஆமா தலைவரே’ என்று ஆமோதித்திருக்கிறார். அவரிடம் மேற்கொண்டும் சில விஷயங்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டு அவரை அனுப்பி இருக்கிறார்.

இன்னொரு பகுதிச் செயலாளரோ ஸ்டாலினிடம் எதையும் மறைக்காமல் மாநகராட்சி நிலவரத்தை அக்கு வேறு ஆணி வேறாக புட்டுப் புட்டு வைத்திருக்கிறார். ‘சொத்துவரி முறைகேடு விவகாரத்தில் நேர்மையான விசாரணை நடக்கவில்லை. தவறு செய்துவிட்டு வெளியே ஹாயாகச் சுற்றும் மண்டலத் தலைவர் ஒருவரை போலீஸார் கைது செய்யவில்லை.

அதேசமயம், சிலரை விசாரணை என்ற பெயரில் வரவழைத்த போலீஸார், அரசுக்கும், கட்சிக்கும் கெட்ட பெயரை உண்டாக்கிவிட்டார்கள்’ என்று அவர் அடுக்கினாராம். இதையெல்லாம் பொறுமையாகக் கேட்டுக்கொண்ட முதல்வர், ‘மிக விரைவில் மாற்றம் வரும்’ என்று சொல்லி அவரை அனுப்பிவைத்துள்ளார்.

ஸ்டாலினிடம் பேசிவிட்டு வந்தவர்கள் அவரது எண்ண ஓட்டத்தை வைத்து, ‘விரைவில் மதுரை மாநகர திமுகவில் மாற்றம் இருக்கலாம். மேயரும் மாற்றப்படலாம்’ என்கிறார்கள்.

ஆக மொத்தத்தில், சொத்துவரி முறைகேட்டின் பின்னணியில் கோஷ்டி அரசியல் நடத்திக் கொண்டு சொந்தக் கட்சியினரே திமுக அரசுக்கு அவப்பெயரை உண்டாக்கி விட்டார்கள்” என்று சொன்னார்கள் அவர்கள்.

மதுரை மாநகராட்சி சொத்துவரி முறைகேடு வெளிச்சத்துக்கு வந்ததிலிருந்தே, மதுரை மேயரை மாற்றப் போவதாக செய்திகள் வெளியாவதும் பின்னர் அதுவே அடங்கிப் போவதும் வாடிக்கையாக இருந்து வருகிறது. ஆனால், இம்முறை மேயர் மாற்றம் நிச்சயமாக இருக்கும் என்கிறார்கள் அறிவாலயத்துக்குச் சென்று ஆராய்ச்சி மணியை அடித்துவிட்டு வந்திருக்கும் உடன்​பிறப்​புகள்​!