நீதிமன்றத்தை 'ப்ளாக் மெயில்' செய்யாதீர்கள்: சவுக்கு சங்கர் தரப்புக்கு நீதிபதிகள் எச்சரிக்கை
சவுக்கு சங்கர் ஜாமீன் வழக்கை விசாரிப்பதில் இருந்து விலக போவதில்லை என நீதிபதி வேல்முருகன் தலைமையிலான சென்னை உயர்நீதிமன்ற அமர்வு தெரிவித்துள்ளது.
யூ-டியூபர் சவுக்கு சங்கர் மீது ஆதம்பாக்கம் மற்றும் சைதாப்பேட்டை காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட மோசடி வழக்குகளின் அடிப்படையில் 2025ஆம் ஆண்டு டிசம்பர் 13ம் தேதி காவல்துறையினர் சவுக்கு சங்கரை கைது செய்தனர். இதையடுத்து, மருத்துவ காரணங்களுக்காக சங்கரை ஜாமீனில் விடுவிக்கக்கோரி அவரது தாயார் கமலா தொடர்ந்த ஆட்கொணர்வு வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், சவுக்கு சங்கருக்கு மார்ச் 25 வரை 3 மாதங்கள் இடைக்கால நிபந்தனை ஜாமீன் வழங்கியது.
இந்நிலையில், நீதிமன்றம் வழங்கிய இடைக்கால ஜாமீனை ரத்து செய்யக்கோரி காவல்துறை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில், "நீதிமன்றம் விதித்த ஜாமீன் நிபந்தனைகளை சவுக்கு சங்கர் மீறியுள்ளார். தொடர்ந்து அவதூறு பரப்பும் வகையில் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். அவருக்கு மருத்து சிகிச்சை அளிக்க ஸ்டான்லி மருத்துவமனையில் மருத்துவக்குழு ஏற்படுத்த தயாராக உள்ளது" என தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கை கடந்த வாரம் விசாரித்த உயர்நீதிமன்றம், மருத்துவ காரணங்களுக்காக ஜாமீன் பெற்று சாட்சிகளை மிரட்டலாமா? என சவுக்கு சங்கர் தரப்பிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், சவுக்கு சங்கருக்கு எதிரான அனைத்து ஆவணங்களையும் காவல்துறை சேகரித்து வைக்க காவல்துறைக்கு உத்தரவிட்டதுடன், மனுவுக்கு சங்கரின் தாயார் கமலா பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணை நீதிபதிகள் பி.வேல்முருகன், எம்.ஜோதிராமன் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சங்கரின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "இந்த வழக்கை இந்த அமர்வு விசாரிக்க கூடாது. வேறு நீதிபதிகள் விசாரணைக்கு மாற்ற தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்ய வேண்டும்" என தெரிவிக்கப்பட்டது.
இதை கேட்ட நீதிபதிகள், இந்த நீதிமன்றத்தையும் 'ப்ளாக் மெயில்' செய்ய முயற்சிக்க வேண்டாம். அது பலிக்காது, நாங்கள் இந்த வழக்கில் இருந்து விலக மாட்டோம். இப்படிப்பட்ட கோரிக்கையை நாங்கள் ஒரு போதும் ஏற்றதில்லை. தேவைபட்டால் சவுக்கு சங்கர் தலைமை நீதிபதியிடம் முறையிட்டு நிவாரணத்தை கோரலாம்.
இந்த அமர்வின் மீது நம்பிக்கை இல்லை என சவுக்கு சங்கர் மனு தாக்கல் செய்திருந்தாலும், அவருடைய ஜாமீனை ரத்து செய்ய கோரும் வழக்கிலிருந்து நாங்கள் விலக போவதில்லை எனவும் நீதிபதிகள் திட்டவட்டமாக தெரிவித்தனர்.
மேலும், சவுக்கு சங்கர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நாளை (ஜன 20) பிற்பகல் ஒத்திவைத்தனர்.