தமிழ்நாட்டில் மட்டும் முஸ்லிம்கள் பாதுகாப்பாக இருப்பது எப்படி? ஆளூர் ஷா நவாஸ் நெகிழ்ச்சி பேச்சு

தமிழ்நாட்டில் மட்டும் முஸ்லிம்கள் பாதுகாப்பாக இருப்பது எப்படி? ஆளூர் ஷா நவாஸ் நெகிழ்ச்சி பேச்சு

வட மாநிலங்களை ஒப்பிடும் போது, தமிழ்நாட்டில் முஸ்லிம்கள் பாதுகாப்பாக இருப்பதற்கான காரணங்கள் குறித்து விசிக துணை பொதுச்செயலாளர் ஆளூர் ஷா நவாஸ் நெகிழ்ச்சியுடன் பேசினார்.

மறைந்த பாடகர் நாகூர் ஹனீபாவின் நூற்றாண்டு விழா, தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஆளூர் ஷா நவாஸ் கலந்து கொண்டு உரையாற்றினார்.

அவர் பேசுகையில், "நாகூர் ஹனீபாவுக்கு நினைவு பூங்கா அமைக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் கடந்த ஆண்டு நான் கோரிக்கை வைத்தேன். அதை ஏற்று, தற்போது ரூ.2.5 கோடி செலவில் நாகூர் ஹனீபா பெயரில் நினைவு மண்டபம் ஒன்றை தமிழக அரசு கட்டி வருகிறது. நாகூரில் ஒரு தெருவிற்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.

நாகூர் ஹனிபா பெயரில் ஒரு அரங்கம் கட்டப்பட உள்ளது. அவருடைய நூல்கள் தமிழக அரசால் வெளியிடப்பட இருக்கின்றன. சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் தமிழுக்கும், தமிழகத்திற்கும் தொண்டாற்றிய சிந்தனை சிற்பிகளின் புகைப்படங்கள் வைக்கப்படுகின்றன. அந்த வரிசையில் நாகூர் ஹனீபாவின் புகைப்படமும் இடம்பெறுகிறது. அவரது நூற்றாண்டு விழாவை அரசு விழாவாக கொண்டாடும் வகையில், வரும் டிசம்பர் 23ஆம் தேதி நாகூரில் அரசு சார்பில் விழா நடைபெறுகிறது. அதில் தமிழக முதலமைச்சர் அல்லது துணை முதலமைச்சர் கலந்துகொள்ள உள்ளனர்" என ஆளூர் ஷா நவாஸ் தெரிவித்தார்.

தொடர்ந்து, முஸ்லிம்கள் பாதுகாப்பு பற்றி பேசிய அவர், "முஸ்லிம்களின் பாதுகாப்பை அவர்களின் எண்ணிக்கை தீர்மானிக்காது. மாறாக, முஸ்லிம் அல்லாதவர்களின் நல்லெண்ணம்தான் முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதி செய்கிறது.

எனவே தான், தமிழகத்தில் முஸ்லிம்கள் எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும், அவர்கள் பாதுகாப்போடு இருக்கிறார்கள். அனைத்து மதத்தினருடனும் இணைந்து சகோதரத்துவத்துடன் வாழ்கிறார்கள். இதுவே வட மாநிலங்களை எடுத்துக் கொண்டால், முஸ்லிம்களின் எண்ணிக்கை அங்கு அதிகம். ஆனால், இத்தகைய பாதுகாப்புடன் அவர்களால் அங்கு வாழ முடியவில்லை" எனக் கூறினார்.

தொடர்ந்து, நாகூர் ஹனீபா குறித்து பேசிய அவர், "தன் வாழ்நாள் முழுவதும் தனது குரலால் சமய நல்லிணக்கத்திற்கும், தமிழ் மொழிக்கும் பெருந்தொண்டாற்றி உள்ளார். திராவிட இயக்க அரசியலுக்காக தனது கடைசி மூச்சு வரை கொடுத்தவர் நாகூர் ஹனீபா என்பதை யாரும் மறுக்க முடியாது.

75 ஆண்டுகால திமுக வரலாற்றில் தெருமுனைக் கூட்டங்கள் முதல் தேர்தல் பரப்புரைகள் வரை ஹனீபாவின் பாடல்கள் உயிர்ப்புடன் இருக்கின்றன. 'அழைக்கிறார் அண்ணா', 'ஓடி வருவது உதயசூரியன்', 'கள்ளக்குடி தந்த கருணாநிதி வாழ்கவே' போன்ற பாடல்களை விட்டு விட்டு இன்றும் நகர்ந்து செல்ல முடியவில்லை. ஹனீபாவின் குரல் தொடர்ந்து திராவிட இயக்கத்தில் பயணிக்கிறது" என ஆளூர் ஷா நவாஸ் பேசினார்.