பாமக யாருக்கு சொந்தம்? ராமதாஸின் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
பாமக விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து ராமதாஸ் தொடர்ந்த மனு மீதான விரிவான விசாரணை வரும் 11ஆம் தேதி நடைபெறும் என டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ஆகியோருக்கு இடையே கருத்து மோதல் ஏற்பட்டு இருவரும் தனித்தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர். இருவரையும் சமாதானப்படுத்த மூத்த நிர்வாகிகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் அனைத்தும் முயற்சிகளும் தோல்வியில் முடிந்தது. இதனால், பாட்டாளி மக்கள் கட்சியில் குழப்பம் நிலவியதால் தந்தை, மகன் இருவரில் யாரை ஆதரிப்பது? என்று தெரியாமல் தொண்டர்கள் தவிப்புக்கு ஆளாகி வந்தனர்.
இந்நிலையில் ராமதாஸ் தலைமையில் கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற பாமக ஒழுங்கு நடவடிக்கைக்குழு கூட்டத்தில் கட்சியின் விதிகளுக்கு மாறாக அன்புமணி நடந்ததாக அவர் மீது 16 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது. மேலும் இது பற்றி அன்புமணி விளக்கம் அளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதற்கு அன்புமணி எந்த விளக்கமும் அளிக்காததால் கட்சியில் இருந்தும், செயல் தலைவர் பதவியில் இருந்தும் நீக்குவதாக ராமதாஸ் அறிவித்தார்.
இந்நிலையில் பாமக பொதுக்குழு கூட்டம் நிறுவனர் ராமதாஸ் தலைமையில் கடந்த அக்டோபர் 25 ஆம் தேதி தருமபுரியில் நடைபெற்றது. இதில் ராமதாஸ் கலந்துகொண்டு பேசும்போது, 'பாமக செயல் தலைவர் பதவியை எனது பெரிய மகள் ஸ்ரீகாந்திக்கு வழங்குகிறேன். கட்சி அடுத்தக்கட்ட வளர்ச்சியை நோக்கி செல்வதற்கான முன்னெடுப்பாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஸ்ரீகாந்தி கட்சியை வளர்ப்பார், எனக்கும் பாதுகாப்பாக இருப்பார்" என்றார்.
இந்நிலையில் தமிழ்நாடு சட்டப் பேரவை தேர்தல் வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ளதை முன்னிட்டு பாமகவுக்கு தானே தலைவர் என்றும், தங்களது தரப்புக்கு கட்சியின் 'மாம்பழம்' சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்றும், இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கடிதம் சமீபத்தில் கடிதம் அனுப்பி இருந்தார். இதற்கு பதில் அளித்துள்ள இந்திய தேர்தல் ஆணையம் ''வரும் 2026 ஆம் ஆண்டு ஆகஸ்டு 1ஆம் தேதி வரை அன்புமணி தான் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர்'' என்று ராமதாசுக்கு கடிதம் அனுப்பி உள்ளது.
இந்த கடிதம் பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும் விவகாரத்தை சட்டரீதியாக அணுகுவோம் என ராமதாஸ் கூறியிருந்தார். இதற்கிடையே பாட்டாளி மக்கள் கட்சியை மீட்டெடுப்பதற்காக நிறுவனர் ராமதாஸ் குழு ஒன்றை அமைத்துள்ளார். இந்த குழுவில் ஜி.கே மணி, பொதுச்செயலாளர்கள் மன்சூர் அலி, முரளி சங்கர், நிர்வாகிகள் சதாசிவம், முன்னாள் நீதிபதி அருள் ஆகியோரை கொண்ட நிர்வாக குழுவினர் இடம்பெற்றுள்ளனர்.
இந்த குழு சட்டப் போராட்டம் நடத்தும் என்று ராமதாஸ் அறிவித்திருந்த நிலையில், பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அந்த மனுவில், 'பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பில் கொடுக்கப்பட்ட அசல் ஆவணங்களை முறையாக ஆராயாமல் தேர்தல் ஆணையம் தவறான முடிவெடுத்துள்ளது' என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வழக்கு இன்று (டிச.2) விசாரணைக்கு வந்தபோது நீதிபதி மினி புஷ்கர்னா, மனு மீது விரிவான விசாரணை நடத்த ஏதுவாக வழக்கை வரும் டிசம்பர் 11 ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.