தவெக யாருடன் கூட்டணி? தலைமை நிர்வாகிகளுடன் விஜய் 'அவசர' ஆலோசனை
2026 சட்டப் பேரவை தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுக்கள் அமைப்பது உள்ளிட்டவை தொடர்பாக தவெக தலைமை நிர்வாகிகளுடன் கட்சியின் தலைவர் விஜய் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டார்.
சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள விஜய் இல்லத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில், தவெக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், தேர்தல் பிரிவு மேலாண்மை செயலாளர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தமிழக வெற்றி கழகத்தை பொறுத்தவரை, தவெக தலைவர் விஜய் தலைமையில் தான் கூட்டணி என்றும், விஜயை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்றுக் கொள்ளும் கட்சிகளுடன் மட்டும் தான் கூட்டணி என்றும் தவெக சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் அடிப்படையிலேயே கூட்டணி பேச்சுவார்த்தை நடந்தப்படும் என்றும் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கூட்டணிக்கு வரும் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவது தொடர்பாக தவெக சார்பில் கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், கூட்டணி பேச்சுவார்த்தை குழு அமைப்பது தொடர்பாகவும், இதில் யார் யாரெல்லாம் இடம் பெறுவார்கள்? என்பது தொடர்பாகவும் தலைமை நிர்வாகிகளுடன் விஜய் இன்று ஆலோசனை நடத்தினார். ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் கூட்டணி பேச்சுவார்த்தை குழுவில் யார் யாரெல்லாம் இடம்பெறுவார்கள்? என்ற அறிவிப்பை விஜய் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் தேர்தல் அறிக்கை தயாரிப்பது தொடர்பாகவும் குழு அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு அமைப்பு தொடர்பாகவும் இந்த ஆலோசனை கூட்டத்தில் விஜய் ஆலோசனை நடத்தினார்.
மேலும் தவெக தலைவர் விஜய், அண்மையில் ஈரோடு சுற்றுப் பயணத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ள நிலையில் வரும் நாட்களில் எந்தெந்த மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்வது? சுற்றுப் பயணத்தை எவ்வாறு நடத்துவது? என்பது தொடர்பாகவும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
முக்கியத்துவம் வாய்ந்த கட்சியின் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக வெற்றி கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.