சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய ரவீந்திர ஜடேஜா
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 4000 ரன்கள் மற்றும் 300 விக்கெட்டுகளையும் வீழ்த்திய இரண்டாவது இந்திய வீரர் என்ற சாதனையை ரவீந்திர ஜடேஜா படைத்துள்ளார்.
இந்தியா-தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தாவிலுள்ள ஈடன் கர்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணியில் ஐடன் மார்க்ரம் 31 ரன்களையும், வியான் முல்டர், டோனி டி ஜோர்ஸி ஆகியோர் 24 ரன்களை சேர்த்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
இதன் காரணமாக தென்னாப்பிரிக்க அணி 159 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதன்பின் முதல் இன்னிங்ஸை தொடர்ந்த இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 12 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். அடுத்து வந்த வாஷிங்டன் சுந்தர் 29 ரன்களிலும், மற்றொரு தொடக்க வீரர் கேஎல் ராகுல் 39 ரன்களையும் சேர்த்து விக்கெட்டுகளை இழந்தனர்.
பின்னர் களமிறங்கிய வீரர்களில் ரிஷப் பந்த் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் 27 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். இதன் காரணமாகஇந்திய அணி 189 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தென்னாப்பிரிக்க தரப்பில் சிமோன் ஹார்மர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து 30 ரன்கள் பின் தங்கிய நிலையில் தென்னாப்பிரிக்க அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில், இப்போட்டியில் மூலம் இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா புதிய மைல்கல் ஒன்றை எட்டியுள்ளார். அந்த வகையில் இப்போட்டியில் ஜடேஜா 27 ரன்களை சேர்த்து விக்கெட்டை இழந்திருந்தாலும், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 4 ஆயிரம் ரன்களை பதிவு செய்து அசத்தியுள்ளார்.
இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் பேட்டிங்கில் 4000 ரன்களையும், பந்துவீச்சில் 300 விக்கெட்டுகளையும் வீழ்த்திய இரண்டாவது இந்திய வீரர் மற்றும் உலகின் நான்காவது வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். இந்த பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் 5248 ரன்களையும், 434 விக்கெட்டுகளையும் வீழ்த்தி முதலிடத்தில் உள்ளார்.
டெஸ்டில் 4ஆயிரம் & 300 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள்
- கபில் தேவ் - 5248 ரன்கள் & 434 விக்கெட்டுகள்
- டேனியல் வெட்டோரி - 4531 ரன்கள் & 362 விக்கெட்டுகள்
- இயான் போத்தம் - 5200 ரன்கள் & 383 விக்கெட்டுகள்
- ரவீந்திர ஜடேஜா - 4000 ரன்கள் & 330 விக்கெட்டுகள
தென்னாப்பிரிக்கா பிளேயிங் லெவன்: ஐடன் மார்க்ரம், ரியான் ரிக்கெல்டன், வியான் முல்டர், டெம்பா பவுமா(கேப்டன்), டோனி டி ஜோர்ஸி, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், கைல் வெர்ரைன், சைமன் ஹார்மர், மார்கோ ஜான்சன், கார்பின் போஷ், கேசவ் மகாராஜ்
இந்தியா பிளேயிங் லெவன்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல், வாஷிங்டன் சுந்தர், ஷுப்மன் கில்(கேப்டன்), ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா, துருவ் ஜூரல், அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்.