கருப்பைவாய் புற்றுநோயை தடுக்க பள்ளி மாணவிகளுக்கு தடுப்பூசி - ஸ்டாலின் தொடங்கி வைப்பு
கருப்பைவாய் புற்றுநோயை தடுத்திடும் வகையில் 30 ஆயிரம் பள்ளி மாணவிகளுக்கு HPV (Human Papilloma Virus) தடுப்பூசி வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் மு.க. ஸ்டாலின், தமிழ்நாடு புற்றுநோய் தடுப்பு மற்றும் பராமரிப்பு இயக்கத்தின் செயல் திட்ட ஆவணத்தை வெளியிட்டார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாட்டில், ஆறு நோய்களை தடுப்பதற்கான விரிவுபடுத்தப்பட்ட தடுப்பூசி திட்டம் 1978-ல் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தை மேலும் வலுப்படுத்துவதற்காக, நாடு தழுவிய தடுப்பூசி திட்டம் 1985-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. தடுப்பூசி திட்டத்தின் கீழ், 11 வகையான தடுப்பூசிகளை கர்ப்பிணித் தாய்மார்களுக்கும், குழந்தைகளுக்கும் அளித்து 12 வகையான தடுப்பூசியினால் தடுக்கப்படக்கூடிய நோய்களிலிருந்து பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது.
இந்தியாவில் ஆண்டுதோறும் சுமார் 1.2 லட்சம் பெண்களுக்கு கருப்பைவாய்ப் புற்றுநோய் புதிதாக கண்டறியப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் பெண்களை பாதிக்கும் புற்றுநோய்களில் மார்பக புற்றுநோய்க்கு அடுத்தபடியாக, கருப்பைவாய் புற்றுநோய் கண்டறியப்பட்டு வருகிறது. ஹெச்.பி.வி வைரஸ் (HPV - Human Papilloma Virus) தொற்றின் காரணமாக ஏற்படும் கருப்பைவாய் புற்றுநோயை ஹெச்.பி.வி தடுப்பூசி செலுத்துவதின் மூலம் தடுக்க இயலும்.
HPV (Human Papilloma Virus) தடுப்பூசி வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தல்: தமிழ்நாடு அரசின் 2025-2026 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில், கருப்பைவாய் புற்றுநோயை தடுக்கவும், தமிழ்நாட்டில் அந்நோயினை அறவே அகற்றிடவும் HPV (Human Papilloma Virus) தடுப்பூசியை 14 வயதுடைய அனைத்து பெண் குழந்தைகளுக்கும் படிப்படியாக வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கென 2025 – 26 ஆம் ஆண்டில் 36 கோடி ஒதுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அந்த அறிவிப்பின் தொடர்ச்சியாக, தடுப்பூசி திட்டத்தினை தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்த 14 வயதுடைய 3,38,649 பெண் குழந்தைகளுக்கு HPV தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக (Pilot phase) கருப்பை வாய் புற்றுநோய் பாதிப்பு அதிகம் உள்ள தர்மபுரி, பெரம்பலூர், திருவண்ணாமலை மற்றும் அரியலூர் ஆகிய 4 மாவட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அம்மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் அரசு சார்ந்த பள்ளிகளில் 30,209 மாணவிகளுக்கு HPV (Human Papilloma Virus) தடுப்பூசி வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக, மாநிலம் முழுவதும் உள்ள எஞ்சிய மாவட்டங்களில் உள்ள 14 வயதுடைய பெண் குழந்தைகளுக்கு இத்தடுப்பூசி செலுத்தப்படும்.
தமிழ்நாடு புற்றுநோய் தடுப்பு மற்றும் பராமரிப்பு இயக்க செயல்திட்ட ஆவணம் வெளியீடு (Tamil Nadu Cancer Care Mission): புற்றுநோய் தடுப்பு மற்றும் பராமரிப்பை மேம்படுத்த தமிழ்நாடு அரசு கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கட்டமைப்பு மேம்பாடு, ஆரம்பநிலை புற்றுநோய் கண்டறிதல், மற்றும் மேம்பட்ட சிகிச்சை வழங்குதல் உட்பட பல்வேறு அம்சங்கள் இதில் அடங்கும்.
புற்றுநோய் என்பது மக்களின் நலத்திற்கு பெரும் தீங்காக இருந்து வருகிறது. குறிப்பாக, வாழ்க்கைமுறை சார்ந்த மாற்றங்களால் ஏற்படும் புற்றுநோய்கள் அதிகரித்து வருவதால், ஒருங்கிணைக்கப்பட்ட விரிவான அணுகுமுறையை செயல்படுத்துவது அவசியமாகிறது.
தமிழ்நாடு அரசால் உருவாக்கப்பட்டுள்ள தமிழ்நாடு புற்றுநோய் தடுப்பு மற்றும் பராமரிப்பு இயக்கமானது நோய் தடுப்பு, ஆரம்பநிலையில் கண்டறிதல், நோயறிதல், சிகிச்சை, வலி நிவாரண சிகிச்சை நீடித்த மற்றும் தரமான வாழ்வு ஆகியவற்றை உள்ளடக்கி, விரிவுபடுத்தி புற்றுநோயால் ஏற்படும் முன்கூட்டியே நிகழும் இறப்புகளைக் குறைப்பதை நோக்கமாக கொண்டுள்ளது.
ஒருங்கிணைந்த இந்த இயக்கத்தில், மேம்பட்ட தொழில்நுட்பங்கள், சமூகப் பங்களிப்பு மற்றும் புற்றுநோய் ஆராய்ச்சி ஆகியவற்றைப் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், சமூக நலன் – மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், சட்டமன்ற உறுப்பினர் இ. கருணாநிதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.