'பாகுபலி' யானை மீது மோதிய வனத்துறை வாகனம் - கோவையில் நள்ளிரவில் பரபரப்பு

'பாகுபலி' யானை மீது மோதிய வனத்துறை வாகனம் - கோவையில் நள்ளிரவில் பரபரப்பு

 மேட்டுப்பாளையம் அருகே வனக்கல்லூரிக்குள் புகுந்த பாகுபலி காட்டு யானையை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டபோது வனத்துறையினர் யானையை துரத்திச் சென்று, யானையின் காலில் வாகனத்தை விட்டு மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வனத்துறையினரின் இத்தகைய செயலுக்கு சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலையடிவார கிராமங்களில் யானை, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகளின் நடமாட்டம் அதிகளவில் உள்ளது. இவ்வாறு உணவு தேடி வனப்பகுதியை விட்டு வெளியேறும் காட்டு யானைகள், விவசாய நிலங்களை சேதப்படுத்துவது, மனிதர்களை தாக்குவது போன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றன. இதனால், மக்களின் பாதுகாப்பு கருதி குடியிருப்புக்குள் புகும் காட்டு யானைகளை விரட்டும் பணியில் வனத்துறையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று இரவு 11.30 மணியளவில் சிறுமுகை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய பாகுபலி காட்டு யானை கோத்தகிரி சாலையில் உள்ள வனக்கல்லூரி வளாகத்திற்குள் நுழைந்தது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகை வனத்துறையினர் ரோந்து வாகனங்கள் மூலம் யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது வனத்துறை வாகனத்தை எதிர்த்து நின்ற பாகுபலி யானை தனது தந்தத்தால் வாகனத்தை அசைத்து பார்த்தது. இதனால் வனத்துறையினர் வாகனத்தில் இருந்து அலார சத்தம் எழுப்பியபடி யானையை விரட்டினர். இதில், யானை திரும்பி ஓட முயன்றபோது அங்கு மரம் இருந்ததால் யானையின் பின் காலில் வனத்துறை வாகனம் எதிர்பாராத விதமாக மோதியது.

இதனால் பதற்றமடைந்த யானை வனக்கல்லூரி வளாகத்தில் இருந்து வெளியில் சென்றது. தொடர்ந்து, பாகுபலியை துரத்திச்சென்ற வனத்துறையினர் அதனை வனப்பகுதிக்குள் விரட்டினர். இதுகுறித்த வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலானது. இந்த நிலையில் வன விலங்குகளை பாதுகாக்கும் வனத்துறையினரே யானையை தாக்கும் நோக்கிலும், கோபமூட்டும் நோக்கிலும் செயல்பட்ட இந்த செயலுக்கு வன ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் இதுவரை யாரையும் தாக்காத பாகுபலி யானையை, கோபமூட்டும் செயலில் வனத்துறையினர் ஈடுபடாமல் யானையை விரட்ட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.