‘வா வாத்தியார்' முழு கடனையும் அடைத்தால் ரிலீஸ் செய்யலாம் - ஐகோர்ட் ஆணை

‘வா வாத்தியார்'   முழு கடனையும் அடைத்தால் ரிலீஸ் செய்யலாம்  -  ஐகோர்ட் ஆணை

'வா வாத்தியார்' திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கடனை முழுமையாக செலுத்தினால் மட்டுமே படத்தை வெளியிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.

அர்ஜுன் லால் சுந்தர் தாஸ் என்பரிடம் பெற்ற ரூ.21.78 கோடியில் ரூ.3.75 கோடியை இன்று தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா செலுத்திய நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகி உள்ள 'வா வாத்தியார்' திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரித்துள்ளார். இந்த திரைப்படத்தை கடந்த ஆண்டு டிசம்பர் 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால் நிதி பிரச்சனைகள் காரணமாக ரிலீஸ் ஆகவில்லை. இந்நிலையில் வரும் ஜனவரி 14 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

" இந்த நிலையில், உயர் நீதிமன்ற சொத்தாட்சியர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், தொழிலதிபர் அர்ஜுன்லால் சுந்தர் தாஸ் என்பவர் திவாலானவர் என கடந்த 2014 ஆம் ஆண்டு அறிவித்து அவருடைய சொத்துகளை நிர்வகிக்க சொத்தாட்சியரையும் நியமித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. திவாலானவர் என அறிவிக்கப்பட்ட அர்ஜூன் லால் சுந்தர் தாஸிடம் இருந்து ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் 10 கோடியே 35 லட்சம் ரூபாய் கடன் பெற்றிருந்தது. அந்த தொகை வட்டியுடன் சேர்த்து தற்போது 21 கோடியே 78 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய். அந்த தொகையை செலுத்த ஞானவேல் ராஜாவுக்கு உத்தரவிட வேண்டும் என்றும், அதுவரை 'வா வாத்தியார்' திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கவும், படம் மூலம் கிடைக்கும் வருவாயை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஏற்கனவே பலமுறை ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்திற்கு அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால், முழு தொகையையும் செலுத்தவில்லை. கங்குவா, தங்கலான் உள்ளிட்ட படங்களை திரையிடுவதற்கு முன் 1 கோடி ரூபாய் நீதிமன்றத்தில் செலுத்துவதாக உறுதி அளித்து நீதிமன்றத்தின் அனுமதியை பெற்று திரைப்படத்தை வெளியிட அனுமதி பெற்றது. இதுவரை 7 முறை கடனை செலுத்த ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்துக்கு அவகாசம் அளிக்கப்பட்டது. அதனால், கடனை செலுத்தாமல் "வா வாத்தியார்" படத்தை வெளியிட தடை விதித்து உத்தரவிட்டது.

இந்த உத்தரவில் மாறுதல்கள் செய்யக் கோரி ஸ்டூடியோ கிரீன் நிறுவினம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள், எஸ்.எம். சுப்ரமணியம், குமரப்பன் அமர்வில் அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தயாரிப்பாளர் தரப்பில், கடன் தொகைக்காக சுமார் 3 கோடியே 75 லட்சம் ரூபாய் பணத்தை செலுத்த தயாராக இருப்பதால் இறுதி வாய்ப்பாக 'வா வாத்தியார்' திரைப்படத்தை வெளியிட அனுமதிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

அதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், ஏற்கனவே பல முறை அவகாசம் வழங்கப்பட்டது. கடனை அடைக்கவில்லை. ஞானவேல்ராஜா தன்னை திவாலானவர் என அறிவித்தால் நீதிமன்றமே அவரது சொத்துகளை பறிமுதல் செய்து கடனை அடைக்கும். 'வா வாத்தியார்' திரைப்படத்தை பொது ஏலத்தில் விட்டு அதில் வரும் பணத்தில் கடனை அடைக்கலாம் என தெரிவித்த நீதிபதிகள், ஜன 19 ஆம் தேதிக்குள் கடனை திருப்பி செலுத்தவில்லை என்றால் படத்தை பொது ஏலத்தில் விடுவதற்கான அனுமதியை நீதிமன்றம் சொத்தாட்சியருக்கு வழங்கும் என உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்திருந்தனர்

 இந்த நிலையில் வழக்கு, நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, ஸ்டுடியோ கிரீன் தரப்பில், 3 கோடியே 75 லட்சம் ரூபாய்க்கான டிடி-யை, பட தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றத்தில் செலுத்தியது. இதைடுத்த மீதி தொகையையும் செலுத்தினால் படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்து கொள்ளலாம் என, நீதிபதிகள் அனுமதி அளித்து உத்தரவிட்டனர்.

இதற்கிடையே, தன்னிடம் பெற்ற மூன்று கோடி கடன் தொகையை திருப்பி தராததால் படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி தனேஷ் அசோசியேட்ஸ் நிறுவனத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி, தடை விதிக்க மறுத்து, மனுவுக்கு பதிலளிக்கும்படி ஞானவேல் ராஜாவுக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தார்.