மேட்டுப்பாளையம் - குன்னூர் ரயில் பாதையில் மண்சரிவு: மலை ரயில் ரத்து

மேட்டுப்பாளையம் - குன்னூர் ரயில் பாதையில் மண்சரிவு: மலை ரயில் ரத்து

மேட்டுப்பாளையம் குன்னூர் ரயில்பாதையில் பல இடங்களில் மண் சரிவு மற்றும் பாறைகள் விழுந்ததால் மலை ரயில் சேவை இன்று ரத்து செய்யப்பட்டது.

நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால், பகல் மற்றும் இரவு நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், தொடர் மழையின் காரணமாக 7 இடங்களில் மரங்கள் விழுந்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. குன்னூர் கட்டப்பெட்டு சாலை மற்றும் சோலூர்மட்டம் சாலையில் மண் சரிவு ஏற்பட்டு போக்குவரத்து தடைப்பட்டது.

நெடுஞ்சாலைத்துறையினர் ஜே.சி.பி உதவியுடன் மண் சரிவை அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனர். குன்னூர் அம்பிகாபுரத்தில் கார் மீது மரம் விழுந்ததில் கார் சேதமடைந்தது.

மலை ரயில் ரத்து: இந்நிலையில், மேட்டுப்பாளையம்-குன்னூர் மலை ரயில் பாதையில் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. மேலும், ரயில் தண்டவாளத்தில் பாறைகள் விழுந்தன. இதனால், இன்று மேட்டுப்பாளையம்-குன்னூர் மற்றும் குன்னூர் ஊட்டி இடையே மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது.

ரயில்வே ஊழியர்கள் ரயில் பாதையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மாவட்டத்தில் இன்று காலை நிலவரப்படி கோத்தகிரி 137, கீழ் கோத்தகிரி 102, பர்லியார் 92, பந்தலூர் 92, கோடநாடு 88, கெத்தை 76, எடப்பள்ளி 72 மி.மீ., மழை பதிவானது.