பதிவு செய்வதற்காக இன்று முதல் ஆர்.டி.ஓ., அலுவலகத்திற்கு புதிய வாகனங்களை கொண்டு செல்லத் தேவையில்லை என்று போக்குவரத்து ஆணையர் அறிவித்துள்ளார்.
சொந்த பயன்பாட்டு வாகனங்களை பதிவு செய்யும் போது அவற்றை நேரில் கொண்டு செல்ல வேண்டிய அவசியமில்லை என மத்திய அரசு, மோட்டார் வாகனச் சட்டத்தில் மாற்றம் செய்தது. ஆனால், இந்த விதிமுறை தமிழ்நாட்டில் அமல்படுத்தப்படாமல் இருந்தது. இதுதொடர்பாக ஆட்டோ மொபைல் டீலர்கள் சங்கம் தொடர்ந்த வழக்கில், மத்திய அரசின் நடைமுறையை அமல்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி இன்று முதல் பைக், கார் போன்ற சொந்த பயன்பாட்டு வாகனங்களை பதிவு செய்ய, நேரில் கொண்டு செல்லத் தேவை இல்லை என்றும், அதனை வாங்கும் ஷோ ரூம்களிலேயே பதிவு செய்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நாளொன்றுக்கு சராசரியாக 4 ஆயிரம் வாகனங்கள் ஆர்டிஓ அலுவலகங்களில் பதிவு செய்யப்பட்டு வந்தது.
இந்த நிலையில், இந்த புதிய நடைமுறை மூலம் லஞ்சம் புழங்குவது குறையும் என சமூக செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். அதே சமயம், வணிக பயன்பாட்டிற்கான வாகன பதிவின் போது, கட்டாயம் வாகனங்களை கொண்டு செல்ல வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.