இருமல் மருந்து விவகாரம்: கைது செய்யப்பட்ட பார்மா உரிமையாளர் ம.பி.க்கு அழைத்து செல்லப்பட்டார்!

இருமல் மருந்து விவகாரம்: கைது செய்யப்பட்ட பார்மா உரிமையாளர் ம.பி.க்கு அழைத்து செல்லப்பட்டார்!

இருமல் மருந்து குடித்த குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில், சென்னையில் கைதான ஸ்ரீசன் பார்மா நிறுவன உரிமையாளரை மத்திய பிரதேச போலீசார் நீதிமன்றத்தில் டிரான்சிட் வாரண்ட் பெற்று அம்மாநிலத்துக்கு அழைத்து சென்றுள்ளனர்.

ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் கோல்ட்ரிஃப் இருமல் மருந்தை உட்கொண்ட 20 குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உயிரிழந்த குழந்தைகளின் சிறுநீரகத் திசுவில் டை எத்திலீன் கிளைக்கால் எனப்படும் வேதிப்பொருள் கலந்திருப்பது கண்டறியப்பட்டது.

விசாரணையில் நச்சுத் தன்மையுள்ள ரசாயனம் கலந்த கோல்ட்ரிஃப் (coldrif Cough Syrup) என்ற இருமல் மருந்தே குழந்தைகளின் உயிரிழப்புக்கு காரணம் எனவும், இந்த மருந்தை தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் உள்ள ஸ்ரீசன் பார்மா நிறுவனம் தயாரித்ததும் தெரிய வந்தது.

இதனையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை (அக்.3) ஸ்ரீசன் பார்மா நிறுவனத்தின் மருந்து தயாரிப்பு ஆலையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது மருந்து தயாரிப்புக்குப் பயன்படுத்தப்படும் மாதிரிகள் கைப்பற்றப்பட்டன. அதில் உயிருக்கு தீங்கு விளைவிக்கும் அளவுக்கு 48.6% டை எத்திலீன் கிளைக்கால் என்ற வேதிப்பொருள் கலக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதனால் அந்நிறுவனத்தின்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே மத்தியப் பிரதேச போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் சென்னைக்கு வந்த தனிப்படை போலீசார், கோல்ட்ரிஃப் இருமல் மருந்தை தயாரித்த ஸ்ரீசன் பார்மா நிறுவனத்தின் உரிமையாளர் ரங்கநாதனை இன்று அதிகாலை சென்னை கோடம்பாக்கத்தில் அவரின் வீட்டில் அசோக் நகர் போலீசார் உதவியுடன் கைது செய்தனர்.

தனிப்படை போலீசார் ரங்கநாதனை சுங்குவார்சத்திரத்தில் உள்ள அவரது மருந்து நிறுவனத்திற்கு அழைத்துச் சென்று, அங்கு அவரிடம் விசாரணை நடத்திய பின்னர் அவரை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர். இந்த மருந்து எந்தெந்த மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது? இந்த மருந்தில் வேறு என்ன மாதிரியான வேதிப்பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளன? இந்த நிறுவனத்திற்கும் வேறு யாருக்கெல்லாம் தொடர்புள்ளது? என்பது போன்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தினர்.

அதன் பின்னர், மத்தியப் பிரதேச மாநில போலீசார் ரங்கநாதனை சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் 14-வது அமர்வு நீதிமன்ற நீதிபதி செந்தில் குமார் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அப்போது நீதிபதி டிரான்சிட் வாரண்ட் வழங்கிய நிலையில் மத்திய பிரதேசம் போலீசார் ரங்கநாதனை அம்மாநிலத்துக்கு அழைத்து சென்றுள்ளனர்.