கோவை மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: 3 பேரை துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீசார்!
கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய மூன்று பேரை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்.
கோவை பீளமேடு அருகேயுள்ள சர்வதேச விமான நிலையத்தின் பின்புறம், கடந்த ஞாயிற்றுக்கிழமை (நவ.2) அன்று இரவு சுமார் 10.30 மணியளவில் கல்லூரி மாணவி ஒருவர் தனது ஆண் நண்பருடன் கார் ஒன்றில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். ஆள் அரவமற்ற அந்த சாலையில் திடீரென கார் அருகே இரு சக்கர வாகனத்தில் வந்த மூவர், காரில் இருந்தவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒரு கட்டத்தில் அது கைகலப்பாக மாற, அந்த மூவரும் மறைத்து வைத்திருந்த கத்தி மற்றும் இரும்பு கம்பியால் காரின் கண்ணாடிகளை அடித்து உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.
இதனால் காரில் இருந்த ஆண் நண்பர் கீழே இறங்கியபோது, அவரது தலை மற்றும் கையில் அந்த 3 பேரும் கத்தியால் தாக்கியுள்ளனர். ரத்த வெள்ளத்தில் அவர் சரிந்ததை அடுத்து, காரில் இருந்த பெண்ணை இழுத்துச் சென்று, அருகிலிருந்த புதர் பகுதியில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். படுகாயமடைந்து மயக்க நிலையில் இருந்த அந்த இளைஞர் மயக்கம் தெளிந்து, போலீசாருக்கு தகவல் கொடுத்ததன் பேரில், அதிகாலை 4 மணியளவில் போலீசார் அவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இச்சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இக்குற்றச்செயலில் ஈடுபட்ட மூவரையும் பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. சம்பவம் நடந்த பகுதியில் சிசிடிவி கேமராக்கள் இல்லாததால் அந்த இடத்திற்கு செல்கிற வழிகளில் உள்ள சிசிடிவிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது குற்றச்செயலில் சம்பந்தப்பட்ட மூவரும் அங்கிருந்து தப்பிச் செல்வது தெரியவந்தது.
இதனையடுத்து குற்ற செயலில் ஈடுபட்ட மூவரையும் தேடும் பணியில் ஈடுபட்டனர். விசாரணையில் அவர்கள் மூவரும் கோவை துடியலூர் அருகேயுள்ள வெள்ளக்கிணறு பட்டத்தரசியம்மன் கோயில் அருகே பதுங்கியிருப்பது தெரியவந்தது. அவர்கள் மூவரையும் தனிப்படை போலீசார் கைதுசெய்ய முயன்றபோது அவர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் காவலர் சந்திரசேகர் என்பவரை தாக்கியுள்ளனர். இதில் அவருக்கு இடது கையில் காயம் ஏற்பட்டுள்ளது.
தப்பியோட முயன்ற மூன்று பேரின் கால்களிலும் பீளமேடு காவல் ஆய்வாளர் அர்ஜுன், சரவணம்பட்டி காவல் ஆய்வாளர் ஞானசேகரன் ஆகியோர் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். அவர்கள் மூவரையும் கோவை அரசு மருத்துவமனையில் போலீசார் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கைது செய்யப்பட்டுள்ள குணா என்கிற தவசி, சதீஷ் என்கிற கருப்பசாமி, கார்த்திக் என்கிற காலீஸ்வரன் ஆகிய 3 பேரும் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், கோவை இருகூர் அருகே வீடு எடுத்து தங்கி, கட்டட வேலை செய்து வந்ததும் தெரியவந்துள்ளது.
இதில் கருப்பசாமி மற்றும் காலீஸ்வரன் இருவரும் சகோதரர்கள் என்பதும், இவர்கள் மீது ஒரு கொலை வழக்கு, வழிப்பறி, அடிதடி, சந்தன மர கடத்தல் ஆகிய வழக்குகள் நிலுவையில் இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து மூவர் மீதும் பெண் வன்கொடுமை வழக்கு, திருட்டு, வழிப்பறி, கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.