என்டிஏ கூட்டணியில் ஓபிஎஸ்..? 'அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம்' - நயினார் பதில்!
தேசிய ஜனநாயக கூட்டணியில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் இணைவதற்கான வாய்ப்பு இருக்கிறதா? என்கிற கேள்விக்கு, "அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம்" என நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் முதற்கட்ட தேர்தல் பரப்புரைகளில் ஈடுபட்டு வருகின்றன. இம்முறை திமுக, அதிமுக கூட்டணியை தொடர்ந்து நாம் தமிழர், தமிழக வெற்றிக் கழகம் என தேர்தல் களம் பரபரப்பை எட்டியுள்ளது. தவிர, தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகள் எந்த கூட்டணிக்கு செல்லும் என்ற எதிர்பார்ப்பும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் "தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்" என்று மாநிலம் முழுவதும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், தேனி மாவட்டத்திற்கு வருகை தந்த நயினார் நாகேந்திரன் போடிநாயக்கனூரில் சாலையில் கட்சி நிர்வாகிகளுடன் நடந்து சென்று பொதுமக்களை சந்தித்தார். பின்னர் நாட்டு இன மாடு வளர்க்கும் விவசாயிகளை சந்தித்து, வனப் பகுதிகளில் நாட்டு மாடு மேய்ச்சலுக்கு இருக்கும் தடைகளால் விவசாயிகள் பாதிக்கப்படுவது குறித்து அவர்களிடம் கேட்டறிந்து கலந்துரையாடினார்.
அதை தொடர்ந்து தேசிய ஜனநாயகக் கூட்டணியில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் இணைவதற்கான வாய்ப்பு இருக்கிறதா? என்கிற கேள்விக்கு, '' அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம்'' என தெரிவித்தார்.
மேலும், வனப்பகுதிகளில் நாட்டு இன மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்ற விவசாயிகள் மீது பதியப்பட்டுள்ள வழக்குகளை ரத்து செய்ய நாங்கள் தமிழக அரசை வலியுறுத்துவோம் என்றும் அவர் தெரிவித்தார்.