“தமிழகத்தில் மக்களின் முதல்வராக பழனிசாமி ஆட்சியில் அமர்வார்” - நயினார் நாகேந்திரன் உறுதி

“தமிழகத்தில் மக்களின் முதல்வராக பழனிசாமி ஆட்சியில் அமர்வார்” - நயினார் நாகேந்திரன் உறுதி

தமிழகத்தில் வரும் ஜூன் மாதத்தில் மக்களின் முதல்வராக பழனிசாமி ஆட்சியில் இருப்பார் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் நம்பிக்கை தெரிவித்தார்.

திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் அளிக்கப்பட்ட தீர்ப்புக்கு வரவேற்பளித்து நெல்லையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இனிப்பு வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், "விரைவில் தேசிய ஜனநாயக கூட்டணி பலம் வாய்ந்த கூட்டணியாக அமையும்.

ஏப்ரல் மாதத்துக்குப் பிறகு ஆட்சி மாற்றம் ஏற்படும் என உத்தரவாதத்துடன் அமித் ஷா உரையாற்றியுள்ளார். 100 நாள் வேலை திட்டத்தை நிறுத்தி விட்டதாக திமுக காங்கிரஸ் கட்சியினர் சொல்லிவருகின்றனர். காங்கிரஸ் ஆட்சியில் 100 நாள் என்பது 150 நாளாக மாற்றப்படும் என சொன்னார்கள். ஆனால் பாஜக அரசு 100 நாளை 125 நாளாக உயர்த்தி வழங்கி வாரம் ஒரு முறை ஊதியம் வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது வரவேற்கத்தக்கது. ஆளும் கட்சி இந்த விவகாரத்தில் சதி செய்தது. முதல்வர் தரப்பில் இந்த விவகாரத்தில் மதக்கலவரம் வரும் என தெரிவிப்பது, அவர்களே மதக் கலவரத்தை தூண்டுவதாக தான் எடுத்துக் கொள்ளபடும். விளக்கு ஏற்றும் விவகாரத்தில் ஆளும் கட்சி நடந்த விதம் மோசமானது. மதக் கலவரத்தை தூண்டுவது முதல்வரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மக்களின் முதல்வராக தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் தமிழக தலைவரான எடப்பாடி பழனிசாமி இருப்பார். பென்ஷன் திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி முடிவெடுக்கப்படும். காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் தொடர்ந்து இருப்பதற்கான சாத்தியம் இருப்பதாக தெரியவில்லை. அவர்கள் அமைச்சரவையில் இடம் கேட்பதாக தகவல்கள் வந்துகொண்டிருக்கிறது.

திமுக ஆட்சி ஊழல் ஆட்சி குடும்ப ஆட்சி. உதயநிதி ஸ்டாலினை முதல்வராக்க எதனையும் செய்ய அரசு தயாராகிவிட்டது. கடந்த ஆண்டு பொங்கலுக்கு திமுக அரசு பரிசு தொகுப்பு கொடுக்காமல், இந்த ஆண்டு ரூ.3000 தேர்தலுக்காக அறிவித்துள்ளது. எனக்கு செந்தில் பாலாஜி மீது எவ்வித காழ்ப்புணர்ச்சியும் கிடையாது. அவரை இப்போது நேரில் சந்தித்தாலும் அவருடன் பேசுவேன். எனது கேள்விக்கு பதில் சொல்ல விரும்பவில்லை எனக் கூறி அதிகமாக பேசியுள்ளார். அவரது விமர்சனத்துக்கு நான் பதில் அளிக்க விரும்பவில்லை” எனத் தெரிவித்தார்.