மனைவியை கடித்த பாம்பு; பையில் போட்டு மருத்துவமனைக்கு கொண்டு வந்த கணவர்
குடியாத்தம் அருகே மனைவியை கடித்த பாம்புடன் மருத்துவமனைக்கு வந்த கணவரால் பரபரப்பு ஏற்பட்டது.
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த போடிபேட்டை பகுதியில் வசித்து வருபவர் தர்மபிரகாஷ். இவரது மனைவி உமாதேவி (45). இந்நிலையில், நேற்று (நவ. 26) இரவு வீட்டில் இருந்த உமாதேவி, காலில் எதோ விஷப்பூச்சி கடித்தது போன்று உணர்ந்துள்ளார். அப்போது பார்த்த போது, இரண்டரை அடி நீளமுள்ள பாம்பு அவரை கடித்து சென்று கொண்டிருந்தது.
அதனைக் கண்டு உமாதேவி கூச்சலிட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்த தர்ம பிரகாஷ் உள்ளே ஓடி வந்தார். அப்போது அவரிடம் பாம்பு தன்னை கடித்து விட்டதாக உமாதேவி கூறியுள்ளார். தனது மனைவியை கடித்த பாம்பை தேடிக் கண்டுபிடித்த தர்ம பிரகாஷ், உடனடியாக மருத்துவமனைக்கு புறப்பட்டுள்ளார்.
அந்த வகையில், தனது மனைவி மற்றும் அவரை கடித்த பாம்புடன் குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு வந்த தர்ம பிரகாஷ், உமாதேவியை சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார். அதனைத் தொடர்ந்து, பாம்பை பார்த்த மருத்துவர்கள் உடனடியாக அவரது மனைவிக்கு சிகிச்சை அளிக்க தொடங்கியுள்ளனர். தற்போது, உமாதேவி மருத்துவர்கள் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், “பாம்புக் கடி என்பது மிகத் தீவிரமானது. பாம்பு கடித்தவுடன் சிகிச்சை அளிக்கவில்லை என்றால், விளைவுகள் மிகவும் மோசமானதாக இருக்கும். எனவே, பாம்பு கடித்தவர்கள் மூச்சுத்திணறல், வாந்தி போன்றவை ஏற்படும் முன் மருத்துவரை அணுக வேண்டும். இந்த சம்பவத்தில் பாம்பை கையோடு கொண்டு வந்ததால், அது எந்த வகை பாம்பு என்பதை அறிந்து உடனடியாக உரிய சிகிச்சை அளிக்க முடிந்தது” என தெரிவித்தனர்.
பொதுவாக பாம்புக் கடிக்கு, எந்த பாம்பு கடித்தது என்பதை பொறுத்தே மருத்துவர்கள் விரைவான சிகிச்சை அளிப்பார்கள். ஆகையால், முடிந்த வரை பாம்பு கடித்த போது, என்ன வகையான பாம்பு என்பதை மருத்துவரிடம் கூற வேண்டும் என தெரிவிப்பார்கள். ஆனால், தனது மனைவியை கடித்த பாம்பை தேடி கண்டு பிடித்து, பையில் போட்டு கையோடு மருத்துவமனைக்கு கொண்டு வந்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது.