மாதம் ரூ.1.25 லட்சம் சம்பளம்! தமிழ் கலை ஆசிரியர்களுக்கு வேலைவாய்ப்பு

மாதம் ரூ.1.25 லட்சம் சம்பளம்! தமிழ் கலை ஆசிரியர்களுக்கு வேலைவாய்ப்பு
தமிழ் மொழி மற்றும் பாரம்பரியக் கலைகளை வெளிநாடுகளில் பரப்பும் நோக்கில் தமிழ்நாடு அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் தமிழ் கலை ஆசிரியர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி பணியமர்த்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த பணிக்கு தேர்வாகும் ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் தங்கள் மொழி, கலாசாரம், பாரம்பரிய கலைகளை அடுத்த தலைமுறையினருக்குக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற நோக்கில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 25 வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும். பரதநாட்டியம் அல்லது பாரம்பரிய நாட்டுப்புற கலைகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதோடு ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும் என்பது முக்கிய தகுதியாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மியான்மர், இந்தோனேசியா, கம்போடியா, மாலத்தீவு, மொரிஷியஸ், ரியூனியன், சீஷெல்ஸ், பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட பல நாடுகளிலும், ஆப்பிரிக்காவின் சில பகுதிகளிலும் உள்ள தமிழ் அமைப்புகளின் கோரிக்கையின் அடிப்படையில் இந்த ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
இந்த பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்படுகின்றன. தேர்வாகும் ஆசிரியர்களுக்கு சம்பளத்துடன் விமான பயணச் செலவு, விசா செலவுகள் மற்றும் தங்குமிடம் போன்ற வசதிகளும் அரசின் சார்பில் வழங்கப்படும். விண்ணப்பப் படிவத்தை தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா இசை மற்றும் நுண்கலை பல்கலைக்கழகத்தின் இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து, தேவையான ஆவணங்களுடன் குறிப்பிட்ட தேதிக்குள் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள பதிவாளர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் கலைகளை கற்றுத் தரும் ஆசிரியர்களுக்கு இது ஒரு அரிய வாய்ப்பாக அமைந்துள்ளது. நல்ல வருமானத்துடன் வெளிநாடுகளில் பணியாற்றி, தமிழின் பெருமையையும் கலாசாரத்தையும் உலக அளவில் எடுத்துச் செல்லும் இந்த திட்டம் பல கலைஞர்களின் கனவாக மாறியுள்ளது.