அடுத்தக்கட்டத்துக்கு நகரும் கரூர் சம்பவ வழக்கு: உயிரிழந்தவர்கள் குடும்பத்தினரிடம் சிபிஐ விசாரணை தொடக்கம்

அடுத்தக்கட்டத்துக்கு நகரும் கரூர் சம்பவ வழக்கு: உயிரிழந்தவர்கள் குடும்பத்தினரிடம் சிபிஐ விசாரணை தொடக்கம்

தவெக தலைவர் விஜயின் பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் உறவினர்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

இந்த விசாரணையின்போது, ஒரு பெண் அதிகாரி உள்பட மூன்று சிபிஐ அதிகாரிகள் உயிரிழந்தவர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக விசாரணை மேற்கொண்டனர்.

குறிப்பாக, இந்தச் சம்பவத்தில் இரண்டு சிறுமிகளை இழந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கோகிலா பழனியம்மாள் ஆகியோரின் இல்லத்தில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். பாதிக்கப்பட்டவர்கள் வசிக்கும் கோதூர்புதூர் பகுதிக்கு சென்று அதிகாரிகள் இந்த விசாரணையை நடத்தினர்.

மேலும், தவெக கூட்ட நெரிசலில் பலியான 41 பேரில் 30க்கும் மேற்பட்டோர் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், அடுத்த இரு தினங்களில் சிபிஐ அதிகாரிகள் இவர்கள் அனைவரிடம் நேரில் விசாரணை நடத்த உள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் செப்டம்பர் 27ஆம் தேதி கரூர் வேலுசாமிப்புரத்தில் நடைபெற்ற அக்கட்சியின் தலைவர் விஜயின் பரப்புரையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர். உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில், இந்த பெருந்துயர சம்பவம் குறித்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.
இந்த வழக்கின் விசாரணைக்காக, ஏஎஸ்பி முகேஷ் குமார் தலைமையிலான சிபிஐ அதிகாரிகள் குழு கடந்த செப்டம்பர் 16 ஆம் தேதி கரூருக்கு வருகை புரிந்தனர். கிட்டத்தட்ட 58 நாட்களாக கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் அமைந்துள்ள சுற்றுலா மாளிகையில் தற்காலிக முகாம் அமைத்து, இதுவரை 300க்கும் மேற்பட்டோருக்கு சம்மன் அனுப்பி அவர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இவர்களில் தவெக கூட்ட நெரிசல் சம்பவத்தை நேரில் பார்த்த, பாதுகாப்புப் பணியில் இருந்த காவல் துறை அதிகாரிகள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், வேலுச்சாமிபுரம் பகுதியில் கடை நடத்தி வரும் வியாபாரிகள், பொதுமக்கள் என கடந்த ஒரு மாதத்தில் 80க்கும் மேற்பட்டோர் சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகி வாக்குமூலம் வழங்கி உள்ளனர்.

இவர்களை தவிர, தவெக கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்த 110 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். அவர்களையும் விசாரணைக்கு ஆஜராகுமாறு சிபிஐ சம்மன் அனுப்பி உள்ளனர். அதன்படி இதுவரை கடந்த 4 நாட்களில் மட்டும் சுமார் 30 பேர் வாக்குமூலம் அளித்துள்ளதாக சிபிஐ முகாம் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, தவெக கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக, கரூர் நகர காவல் துறையினர் பதிவு செய்த வழக்கு ஆவணங்கள், பறிமுதல் செய்யப்பட்ட கார் ஆகியவற்றை திருச்சி மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் நசிர்அலி முன்பு, கரூர் நீதிமன்ற ஊழியர்கள் நேற்று (நவ.14) ஒப்படைத்தனர்.

இதையடுத்து இனி இந்த வழக்கில் சிபிஐ அதிகாரிகள் யாரை கைது செய்தாலும், திருச்சி நீதிமன்றத்தில்தான் ஆஜர் படுத்துவார்கள் என தெரிகிறது. இதேபோன்று இந்த வழக்கில் யாரையாவது நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்றாலும் திருச்சி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து சிபிஐ விசாரணை நடத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டப்பின் இந்த வழக்கின் விசாரணை மதுரையில் உள்ள சிபிஐ நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்ட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த வழக்கில், தவெக கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன், கரூர் நகர பொருளாளர் பவுன்ராஜ் ஆகியோரை கரூர் நகர போலீசார் கைது செய்து சிறையில் அடைத்திருந்தனர். வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்ட நிலையில், இருவரையும் நீதிமன்றம் விடுவித்தது குறிப்பிடத்தக்கது.