பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த மேலும் 2 பேர் கைது
திருபுவனம் பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கில் NIA அதிகாரிகளால் தேடப்பட்டு வந்த தடை செய்யப்பட்ட அமைப்பை சேர்ந்த மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருபுவனத்தைச் சேர்ந்த பாமக பிரமுகர் ராமலிங்கம் கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 5 அன்று அடையாளம் தெரியாத நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். அந்த பகுதியில் மதமாற்றம் குறித்து பிரசங்கம் செய்தவர்களை ராமலிங்கம் தட்டிக் கேட்டது தான் இந்தக் கொலைக்கான காரணம் என தெரிவிக்கப்பட்டது.
இந்த கொலை வழக்கு குறித்து தமிழ்நாடு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில், மொத்தம் 18 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இதில் 13 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில், 5 பேர் தலைமறைவாக இருந்ததால் அவர்களை NIA குழுவினர் தொடர்ந்து தேடி வந்தனர்.
இந்நிலையில் தேடப்பட்டு வரும் தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்த, திருமங்கலகுடியைச் சேர்ந்த முகமது நபீல் ஹாசன் (35) மற்றும் வடக்குமாங்குடியைச் சேர்ந்த புர்ஹானுதீன் (34) இருவரும் பெங்களூருவிலிருந்து சென்னை நோக்கி காரில் வந்து கொண்டிருப்பதாக NIA மற்றும் உளவுத் துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இந்த தகவலின் அடிப்படையில் வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா காவல் துறையினரின் உதவியுடன் சுங்கச் சாவடியில் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டது. அப்போது பெங்களூருவிலிருந்து வந்து கொண்டிருந்த கார் ஒன்றை நிறுத்தி விசாரித்த போது, ராணிப்பேட்டை மாவட்டம் அருகே நெமிலியைச் சேர்ந்த முகமது இம்ரான் (33) மற்றும் அப்பாஸ் (30) ஆகியோர் தேடப்பட்டு வரும் நபீல் ஹாசன் மற்றும் புர்ஹானுதீனை ரகசியமாக அழைத்துச் வந்தது தெரிய வந்தது. உடனடியாக நான்கு பேரும் கைது செய்யப்பட்டனர். காரும் பறிமுதல் செய்யப்பட்டு பள்ளிகொண்டா காவல் நிலையம் கொண்டு செல்லப்பட்டது.
பின்னர் அங்கு தேசிய புலனாய்வு முகமை, உளவுத் துறை அதிகாரிகள் இணைந்து 12 மணி நேரத்திற்கும் மேலாக தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணை முடிந்ததும், துப்பாக்கி ஏந்திய பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கைது செய்யப்பட்டவர்கள் சென்னை அழைத்து செல்லப்பட்டனர்.