தேமுதிக நிறுவனர் மறைந்த விஜயகாந்த்தின் 2ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது. காலை முதல் தேமுதிகவின் தலைமை அலுவலகத்தில் அவரது நினைவிடத்தில் ஏராளமான பொதுமக்களும், அரசியல் கட்சித் தலைவர்களும் அஞ்சலி செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து மாலை அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், எங்கள் கட்சி நிர்வாகிகளும், பொதுமக்களும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். வரமுடியாதவர்கள் ட்விட்டரில் அஞ்சலி செலுத்தினர்” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து அவரிடம், தவெகவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதா? என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த பிரேமலதா விஜயகாந்த், “எங்கள் தரப்பில் இருந்து அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. தவெக தலைவர் விஜய் ஜனநாயக இசை வெளியிட்டு விழாவுக்காக மலேசியா சென்றிருக்கிறார். அவர் எக்ஸ் பக்கத்தில் விஜயகாந்திற்கு அஞ்சலி செலுத்தினார்.
யாரும் வரக்கூடாது என்றில்லை. அவர்களின் சூழ்நிலை காரணமாக வரமுடியாமல் இருந்திருக்கும். இன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் வந்து அஞ்சலி செலுத்தியிருக்க வேண்டியது. ஆனால், கள்ளக்குறிச்சி பயணம் சென்று வந்து உடல்நிலை சரியில்லாததால் அவரால் வரமுடியவில்லை என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சொன்னார். அவருக்குமேகூட உடல்நிலை சரியில்லை என்றும், இருந்தாலும் நேரில் வந்து அஞ்சலி செலுத்த வேண்டும் என வந்ததாக அவர் கூறினார்” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் பிரேமலதா விஜயகாந்த் கூறியதாவது; “ஜனவரி மாதம் 9ஆம் தேதி மாநாடு நடக்க இருக்கிறது. பொங்கலுக்கு பிறகு தமிழ்நாடு முழுவதும் விருப்ப மனு பெறப்படும். கட்சித் தொண்டர்களும், நிர்வாகிகளும் விரும்பும் கூட்டணியை அமைப்போம். அந்தக் கூட்டணி வெற்றிக் கூட்டணியாக இருக்கும்” எனத் தெரிவித்தார்.