''ஜனவரி 2-ல் சமத்துவ நடைபயணத்தை முதலமைச்சர் தொடங்கி வைப்பார்'' - வைகோ
வரும் ஜனவரி 2 ஆம் தேதி மேற்கொள்ள இருக்கும் சமத்துவ நடைபயணத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைப்பார் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று மாலை சந்தித்து பேசினார்.
இதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த வைகோ கூறுகையில், ''பள்ளி, கல்லூரி மாணவர்களை சீர்கெடுக்கும் மது மற்றும் போதை பொருட்களில் இருந்து தடுப்பதற்கான சமத்துவ நடைபயணம் வரும் ஜனவரி 2 ஆம் தேதி திருச்சி மாநகரில் தொடங்க உள்ளேன். வருகின்ற 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறவும் ஒவ்வொரு கிராமமாக சென்று மக்களை சந்திக்க உள்ளேன்.
மேலும், திருச்சியில் தொடங்கும் சமத்துவ நடை பயணத்தின் போது, ஜனவரி 12 ஆம் தேதி வரை ஒவ்வொரு கிராமமாக சென்று மக்கள் மற்றும் விவசாயிகளை சந்தித்திக்க உள்ளேன். திருச்சியில் தொடங்கப்படும் சமத்துவ நடைபயணத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைப்பார்.
மதுரையில் முடியும் இந்த நடைபயண நிறைவு நிகழ்வில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வபெருந்தகை, சிபிஐ, சிபிஎம் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொள்வார்கள். இது என்னுடைய 9 வது நடைபயணம்'' என்று வைகோ கூறினார்.