உருவகேலி விவகாரம்: யூடியூபரின் மன்னிப்பை ஏற்க மறுத்த கௌரி கிஷன்
தன்னை உருவகேலி செய்த யூடியூபரின் பொறுப்பற்ற மன்னிப்பை ஒருபோதும் ஏற்க முடியாது என நடிகை கௌரி கிஷன் காட்டமாக தெரிவித்துள்ளார்.
கடந்த அக்.30 ஆம் தேதி 'அதர்ஸ்' திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படத்தின் கதாநாயகன், இயக்குநர், நடிகை கௌரி கிஷன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். படத்தின் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட கதாநாயகனிடம், "படத்தில் கதாநாயகியை தூக்கினீர்களே, அவரின் எடை என்ன? என்று யூடியூபர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
அடுத்த நாள் இதுதொடர்பாக தனியார் தொலைக்காட்சியில் நடிகை கௌரி கிஷனிடம் கேள்வி எழுப்பியபோது, "இதுபோன்ற முட்டாள்தனமான கேள்விகள் எழுப்பப்படுகின்றன. அனுபவம் வாய்ந்தவர்கள் இதுபோன்ற கேள்விகளை எழுப்பக்கூடாது" என்று கூறினார்.
ஆனால், கடந்த 6ஆம் தேதி படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்ட அதே யூடியூபர், "எங்களை பற்றி தொலைக்காட்சியில் எப்படி தவறாக பேசலாம்? ஒரு நடிகையிடம் எடையை பற்றி கேட்க கூடாதா? நடிகையிடம் வேறு என்ன கேட்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்" என்று கேள்வி எழுப்பினார். மீண்டும் உருவகேலி தொடர்பான கேள்வியால் கொதித்தெழுந்த கௌரி கிஷன், "உடல் எடை தொடர்பாக நீங்கள் எழுப்பும் கேள்வி என்னை உருவகேலி செய்வதற்கு சமம். இது மாதிரியான கேள்விகளை எழுப்பி, என்னை மனஉளைச்சலுக்கு ஆளாக்காதீர்கள்" என்று கூறினார்.
தொடர்ந்து யூடியூபர் நடிகையிடம் இதுதொடர்பாக பல்வேறு கேள்விகளை தொடந்து எழுப்பி வந்த நிலையில், நடிகை கௌரி கிஷன் அவருக்கு தக்க பதிலடி கொடுத்தார். இந்த காட்சி சமூக வலைதளங்களில் பரவி வைரலானது. இந்த நிலையில், பல்வேறு தரப்பினரும் யூடியூபருக்கு கண்டனத்தை தெரிவித்தனர். குறிப்பாக, நடிகர் சங்கம் சார்பில் யூடியூபரின் நடவடிக்கையை எதிர்த்து அறிக்கை வெளியிடப்பட்டது.
பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் தொடர் கண்டனங்கள் வந்த நிலையில், இந்த சம்பவத்தில் தொடர்புடைய யூடியூபர் மன்னிப்பு கோரி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், "நான் கேட்ட கேள்வியை அவர் (நடிகை கௌரி கிஷன்) தவறாக புரிந்துகொண்டார். அது ஜாலியாக கேட்கப்பட்ட கேள்வி. அதனை அவர் சரியாக புரிந்துகொள்ளவில்லை. என்னுடைய கேள்வி அவரை காயப்படுத்தியிருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்" என தெரிவித்திருந்தார்.
நேற்று முன்தினம் இந்த மன்னிப்பு வீடியோவை அவர் வெளியிட்டிருந்த நிலையில், இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் நடிகை கௌரி கிஷன் இன்று பதிலளித்துள்ளார். அதில், "பொறுப்புணர்வு இல்லாமல் மன்னிப்பு கேட்பது உண்மையில் மன்னிப்பே கிடையாது. தான் உருவகேலி செய்யவில்லை. அவர் தவறாக எடுத்துக்கொண்டார், சும்மா ஜாலியா கேட்ட கேள்வி போன்ற கருத்துக்களை கூறி, தனது தவறுகளை மறைக்க பார்க்கிறார். வெற்று வார்த்தைகளை என்னால் மன்னிப்பாக கருத முடியாது. இன்னும் பெட்டராக முயற்சி செய்யுங்கள் கார்த்திக் (யூடியூபர் பெயர்)" என்று அதில் தெரிவித்துள்ளார்