திரைப்படமாக உருவாகும் ‘ஜுகாரி கிராஸ்’: நாயகனாக ராஜ் பி.ஷெட்டி ஒப்பந்தம்

பிரபலமான ‘ஜுகாரி கிராஸ்’ நாவல் அதே பெயரில் படமாக உருவாகிறது. அதில் ராஜ் பி.ஷெட்டி நாயகனாக நடிக்கவுள்ளார்.
சமீபமாக நாவல்களை மையமாக வைத்து படங்கள் உருவாகத் தொடங்கி இருக்கின்றன. அந்த வரிசையில் பிரபல எழுத்தாளர் பூர்ணச்சந்திர தேஜஸ்வியின் புகழ்பெற்ற நாவல் ‘ஜுகாரி கிராஸ்’ திரைப்படமாக உருவாகிறது. இதனை குருதத்த கனிகா இயக்கவுள்ளார். இதில் ராஜ் பி.ஷெட்டி நாயகனாக நடிக்கவுள்ளார்.
இதன் அறிமுக டீஸர் இணையத்தில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது. மொட்டையடித்த தலை, தெறிக்கும் ரத்தம் மற்றும் சிவப்பு ரத்தினகற்களின் காட்சிகளுடன் ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையில் வடிவமைத்திருக்கிறார்கள். குருதத்த கனிகா – ராஜ் பி.ஷெட்டி இருவரும் ‘கரவளி’ படத்தில் இணைந்து பணிபுரிந்துள்ளனர். அதனைத் தொடர்ந்து ‘ஜுகாரி கிராஸ்’ படத்திலும் இணைந்து பணிபுரியவுள்ளனர்.
’கரவளி’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டாலும், இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. அதே வேளையில் ‘ஜுகாரி கிராஸ்’ படத்தின் முதற்கட்டப் பணிகளும் தொடங்கி இருக்கின்றன. இரண்டிலுமே குருதத்த கனிகா பணியாற்றி வருகிறார். ‘ஜுகாரி கிராஸ்’ படத்தினை குருதத்த கனிகா பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் அவரே தயாரிக்கவுள்ளார். இதற்கு ஒளிப்பதிவாளராக அபிமன்யு சாதானந்தன், இசையமைப்பாளராக சச்சின் பஸ்ரூர் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
ராஜ் பி.ஷெட்டியுடன் நடிக்கும் நடிகர்கள் மற்றும் இதர தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகின்றன.