பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் இருந்து உபரி நீர் வெளியேற்றம் அதிகரிப்பு
சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யக் கூடிய முக்கிய நீர்த்தேக்கமான, சத்தியமூர்த்தி சாகர் பூண்டி நீர்த்தேக்கம், செம்பரம்பாக்கம் ஏரி, புழல் ஏரி மற்றும் சோழவரம் ஏரிகளில் இருந்து உபரி நீர் வெளியேற்றம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள 'டிட்வா' புயல் காரணமாக இன்றும் (நவ.29), நாளையும் (நவ.30) வட தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை ஆகிய 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம்
திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்து வரும் மழையால், மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வருகிறது. அதிலும், குறிப்பாக சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யக்கூடிய முக்கிய நீர்த்தேக்கங்களின் ஒன்றான பூண்டி நீர்த்தேக்கத்தின் மொத்த கொள்ளளவான 3,231 மில்லியன் கன அடியில், தண்ணீர் இருப்பு 2739 மில்லியன் கன அடியாக உள்ளது.
அதேபோல், 35 அடி உயரத்தில் 33.73 அடி உயரத்திற்கு தண்ணீர் நிரம்பியுள்ளது. இதனால், ஏரிக்கு வினாடிக்கு 790 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால், பூண்டி அணையின் பாதுகாப்பு கருதி நீர்த்தேக்கத்தில் இருந்து வினாடிக்கு 2,500 கன அடி வீதம் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
செம்பரம்பாக்கம் ஏரி
செம்பரம்பாக்கம் ஏரியின் 24 அடி மொத்த உயரத்தில் 21.70 அடி உயரத்திற்கும், மொத்த கொள்ளளவான 3,645 மில்லியன் கன அடியில், 304 மில்லியன் கன அடியாகவும் தண்ணீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு நீர் வரத்து வினாடிக்கு 100 கன அடியாக உள்ளது. இதனால், சென்னை மாநகர மக்களின் குடிநீருக்காக வினாடிக்கு 165 கன அடி தண்ணீர் அனுப்பி வைக்கப்படுகிறது. தொடர்ந்து, வினாடிக்கு 2,500 கன அடி வீதம் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
புழல் ஏரியின் மொத்த கொள்ளளவான 3,300 மில்லியன் கன அடியில், 2,786 மில்லியன் கன அடியாக தண்ணீர் இருப்பு உள்ளது. 21.20 அடி மொத்த உயரத்தில் 18.88 அடிக்கு தண்ணீர் நிரம்பியுள்ளது. ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 446 கன அடியாக உள்ளது. இதனால், சென்னை மாநகர மக்களின் குடிநீருக்காக வினாடிக்கு 184 கன அடி விதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மேலும், புழல் ஏரியிலிருந்து வினாடிக்கு 1000 கன அடி வீதம் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
சோழவரம் ஏரி
சோழவரம் ஏரியின் 18.86 அடி மொத்த உயரத்தில் 12.74 அடி தண்ணீர் நிரம்பியுள்ளது. மொத்த கொள்ளளவான 1,081 மில்லியன் கன அடியில் தண்ணீர் இருப்பு 541 மில்லியன் கன அடியாக உள்ளது. ஏரிக்கு நீர்வரத்து 45 கன அடியாக உள்ளது. இதனால், ஏரியிலிருந்து சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக 400 கன அடி வீதம் அனுப்பப்பட்டு வருகிறது.
கண்ணன்கோட்டை ஏரி
கண்ணன்கோட்டை ஏரியின் 36.61 அடி மொத்த உயரத்தில் 34.67 அடி உயரத்திற்கு தண்ணீர் நிரம்பியுள்ளது. மொத்த கொள்ளளவான 500 மில்லியன் கன அடியில், 436 மில்லியன் கன அடியாக தண்ணீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு நீர் வரத்து இல்லாத போதிலும், சென்னை மாநகர மக்களின் குடிநீருக்காக வினாடிக்கு 2 கன அடி வீதம் தண்ணீர் அனுப்பி வைக்கப்படுகிறது.
அதன்படி, 5 ஏரிகளின் மொத்த கொள்ளளவான 11,757 மில்லியன் கன அடியில், 9,542 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. இந்நிலையில், பூண்டி நீர்த்தேக்கத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை தொடர்பாக, திருவள்ளுர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர், தமிழ்நாடு மின்னணுவியல் கழக நிர்வாக இயக்குநர் கார்த்திகேயன் மற்றும் மாவட்ட ஆட்சியர் பிரதாப் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.