உன் அரசியல் வாழ்வு முடிந்து விட்டது - அன்புமணிக்கு சாபம் விட்ட ராமதாஸ்
வயிறு எரிந்து சொல்கிறேன் உன் அரசியல் வாழ்வு முடிந்து விட்டது என்று அன்புமணிக்கு சாபம் விடும் வகையில் ராமதாஸ் பேசினார்.
கடலூரில் பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக் குழுக் கூட்டம் அக் கட்சியின் நிறுவனா் ராமதாஸ் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ராமதாஸ் நிறைவுரையாற்றினார். அப்போது அவர், "வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இடஒதுக்கீடு வேண்டும் என சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை போராடி வருகிறார்கள். நமது போராட்டம் கண்டிப்பாக வெற்றி பெறும்.
எனக்கு ஒரு மகன் பிறப்பான், அவன் என்னைப் போலவே இருப்பான் என்பது பாடல் வரி. ஆனால் எனக்கு நடந்த கொடுமை உங்களுக்கெல்லாம் தெரியும். என்னுடைய உயிரைத் தான் அவன் பறிக்கவில்லை. மீதி எல்லாவற்றையும் பறித்து விட்டான். உரிமையை பறித்து விட்டார்.
நான் சிந்திய வியர்வை வீணாகப் போய் விட்டது. பாட்டாளி மக்கள் கட்சியில் எனது உரிமையை யாராலும் பறிக்க முடியாது. எந்த சுப்ரீம் கோர்ட்டுக்கு போனாலும் பறிக்க முடியாது. டெல்லி ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருக்கிறோம். சூழ்ச்சியினால் அன்புமணி தன்னை தலைவன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். இது அனைவருக்கும் நன்றாக தெரியும்.
எந்த நீதிமன்றத்திற்கு சென்றாலும் இந்த ராமதாஸுக்கு தான் வெற்றி. ராமதாஸை யாராலும் தோற்கடிக்க முடியாது. 46 ஆண்டுகளில் 96 ஆயிரம் கிராமங்களுக்கு சென்று மக்களை சந்தித்து, பேசி, அவர்களிடம் நம் சமூகத்தின் நிலைமையை சொல்லி வளர்த்த இந்த கட்சியை நீ முழுவதும் அபகரிக்க எண்ணுகிறாய்" என்று அன்புமணியை கடுமையாக விமர்சித்தார்.
தொடர்ந்து பேசிய ராமதாஸ், "28.5.2022 ஆம் ஆண்டு திருவேற்காடு பொதுக் குழுவில் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட அன்புமணியின் பதவி காலம் முடிந்து விட்டது. இப்பொழுது ஏமாற்றி - பொய் சொல்லி தேர்தல் ஆணையத்தையே விலைக்கு வாங்கி விட்டார். என்னுடன் இருந்தவர்களையும் விலைக்கு வாங்குகிறார். இப்ப தேர்தல் கமிஷனையே விலைக்கு வாங்கிவிட்டார். உண்மையை சொன்னாலும் தேர்தல் ஆணையத்திற்கு புரியவில்லை. ஏன் என்றால் பணம் பத்தும் செய்யும் என்று சொல்வார்கள். பணம் தேர்தல் கமிஷன் வரைக்கும் சென்று விட்டது.
ஆலமரத்தில் அமர்ந்து கோடாலி கொண்டு மரத்தை வெட்ட பார்க்கிறார். அது உன்னால் முடியாது. உன் அரசியல் பயணம் முடிந்து விட்டது. நான் வயிறு எரிந்து சொல்கிறேன். உன் அரசியல் பயணம் முடிவடைந்து விட்டது" என்று கண்ணீர் மல்க ராமதாஸ் பேசினார்.