'ஜனநாயகன்' பட விவகாரம் - தயாரிப்பு நிறுவனத்தின் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்

'ஜனநாயகன்' பட விவகாரம் - தயாரிப்பு நிறுவனத்தின் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்

விஜய்யின் 'ஜனநாயகன்' திரைப்படத்துக்கு தணிக்கை சான்றிதழ் அளிக்கப்படாத விவகாரத்தில் பட தயாரிப்பு நிறுவனம் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

விஜய்யின் கடைசி படம் என அறிவிக்கப்பட்ட 'ஜனநாயகன்', கடந்த 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாவதாக இருந்தது. ஆனால், தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் திரைப்படம் வெளியாகவில்லை. மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் காட்சிகள் இருப்பதாகவும், எனவே படத்தை மறு ஆய்வுக்கு அனுப்பிய பிறகே சான்றிதழ் கொடுக்க முடியும் எனவும் தணிக்கை வாரியம் தெரிவித்தது.

இதனை எதிர்த்து படத் தயாரிப்பு நிறுவனமான கே.வி.என். சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த தனி நீதிபதி பி.டி. ஆஷா, 'ஜனநாயகன்' படத்தை மறு ஆய்வுக்கு அனுப்ப பரிந்துரைத்த தணிக்கை வாரிய தலைவரின் உத்தரவை ரத்து செய்தார். மேலும், ஜனநாயகனுக்கு உடனடியாக தணிக்கை சான்றிதழ் வழங்குமாறும் உத்தரவிட்டார்.

இதனை எதிர்த்து மத்திய தணிக்கை வாரியம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வு முன்பு மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனை விசாரித்த தலைமை நீதிபதி, தனி நீதிபதி தீர்ப்புக்கு தடை விதித்தது. மேலும், குறிப்பிட்ட நேரத்தில் படத்தை வெளியிட வேண்டும் என நீதிமன்றத்தை ஏன் அவசரப்படுத்துகிறீர்கள்? சென்சார் சான்று கிடைக்கும் முன்பே படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்தது ஏன்? என சரமாரியாக கேள்வியெழுப்பினார்.

இதையடுத்து, இந்த வழக்கை 21ஆம் தேதிக்கு தள்ளி வைத்த உயர் நீதிமன்றம், பதில் மனு தாக்கல் செய்யுமாறு தயாரிப்பு நிறுவனத்துக்கு உத்தரவிட்டது. இந்த உத்தவரை எதிர்த்து பட தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் அண்மையில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

உச்ச நீதிமன்றம் தள்ளுபடி

இந்த மனுவானது, நீதிபதி தீபங்கர் தத்தா, அகஸ்டின் ஜார்ஜ் மசிஹ் அமர்வு முன்பு  விசாரணைக்கு வந்தது. ஏற்கனவே இந்த வழக்கில் தணிக்கை வாரியம் கேவியட் மனுவை தாக்கல் செய்திருந்தது. இந்நிலையில், தயாரிப்பு நிறுவனத்தின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும், சென்னை உயர் நீதிமன்ற டிவிஷன் அமர்வு முன்பே முறையிட்டுக் கொள்ளுமாறு அறிவுறுத்திய நீதிபதிகள், வரும் 20-ஆம் தேதிக்குள் இந்த வழக்கை விசாரித்து உரிய முடிவை எடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்துக்கும் உத்தரவிட்டனர்.