வீட்டின் முன் குவிந்த ரசிகர்கள் - பொங்கல் வாழ்த்து தெரிவித்த ரஜினி

வீட்டின் முன் குவிந்த ரசிகர்கள் - பொங்கல் வாழ்த்து தெரிவித்த ரஜினி

தனது வீட்டின் முன்பு குவிந்த ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து தெரிவித்தார்.

சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் இல்லத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அவரிடம் வாழ்த்துகளை பெற பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் ஏராளமான ரசிகர்கள் காலை முதலே அவரது இல்லத்திற்கு முன்பாக குவியத் தொடங்கினர்.

ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு, தீபாவளி, பொங்கல், ரஜினிகாந்த் பிறந்தநாள்உள்ளிட்ட நாட்களில் அவரது இல்லம் முன்பாக ரசிகர்கள் கூடுவார்கள். அப்படி குவியும் ரசிகர்களை நேரில் சந்திக்கும் ரஜினிகாந்த், வாழ்த்துகளைப் பரிமாறிக்கொள்வது வழக்கம். அந்த வகையில், இன்று பொங்கல் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரஜினியின் இல்லத்திற்கு முன்பு ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர்.

தொடர்ந்து, வீட்டில் இருந்து வெளியே வந்த ரஜினிகாந்த், அவர்களுக்கு கையசைத்து பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தார். நடிகர் ரஜினிகாந்த்தை கண்டத்தும் ரசிகர்கள், "தலைவா... தலைவா.." என கூச்சலிட்டு ஆரவாரம் செய்தனர்.

செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த்
செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த் 

எனினும், முதல் தடவை ரஜினிகாந்த் வெளியே வந்தபோது ரசிகர்கள் அவரை சரியாக பார்க்க முடியவில்லை எனக் கூறினர். அந்த கோரிக்கையை ஏற்ற ரஜினி, இரண்டாம் முறையாக தனது இல்லத்தில் இருந்து வெளியே வந்து ரசிகர்களை சந்தித்தார். ஆனாலும் ஆசை அடங்காத ரசிகர்கள், "மீண்டும் உங்களை பார்க்க வேண்டும் தலைவா..." என தொடர்ந்து கூச்சலிட்டனர்.

அதனைத் தொடர்ந்து, மூன்றாவது முறையாகவும் தனது இல்லத்தில் இருந்து வெளியே வந்த ரஜினிகாந்த், ரசிகர்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்தார். அவரை நேரில் கண்ட ரசிகர்களும் உற்சாகமாக அங்கிருந்து கிளம்பினர். மேலும், ரசிகர்களின் வருகை அதிகமாக இருந்ததால், ரஜினியின் வீட்டின் முன்பு போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த், “அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள். குறிப்பாக, இந்த பொங்கல், விவசாயிகளுக்கான பொங்கல். விவசாயிகள் நமது நாட்டின் முதுகெலும்பு. அவர்கள் சந்தோஷமாக மகிழ்ச்சியாக இருந்தால்தான் மற்றவர்களும் சந்தோஷமாக இருக்க முடியும்” எனத் தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், இயக்குநர் சி.பி.சக்கரவர்த்தியின் இயக்கத்தில் நடிக்கவுள்ள திரைப்படம் ஏப்ரலில் தொடங்கும் எனவும், அந்த திரைப்படம் அனைவருக்கும் Entertainment Commercial படமாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.