பொங்கல் விழாவில் 'மாஸ்' காட்டிய திருவள்ளூர் கலெக்டர் - உறி அடித்து உற்சாகம்
திருவள்ளூரில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் கலந்துகொண்ட மாவட்ட ஆட்சியர் பிரதாப், பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டு மக்களுக்கு உற்சாகமூட்டினார்.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழர் திருநாளாம் தை பொங்கல் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மற்ற ஆட்சியர்கலை போல காரில் வந்து இறங்குவார் என மக்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், மாட்டு வண்டியில் வந்து இறங்கி மாஸ் காட்டினார் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரதாப். அவருடன் மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ் குமார், திட்ட இயக்குனர் ஜெயக்குமார் ஆகியோரும்மாட்டு வண்டியில் வந்தனர்.
ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் தாரை தப்பட்டை அடித்தும், பொய்க்கால் குதிரைகள் சூழவும், சிலம்பம் சுற்றியும் பாரம்பரிய முறையில் மாவட்ட ஆட்சியரை வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து, ஆட்சியர் அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொங்கல் பானையில் சமத்துவ பொங்கல் வைத்து அனைவரும் வழிபட்டனர்.
மேலும், அதிகாரிகளின் சார்பில் கோலப்போட்டி, பல்லாங்குழி, கயிறு இழுத்தல் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகளை மாவட்ட ஆட்சியர் பிரதாப் கண்டு களித்தார். அதனைத் தொடர்ந்து, ஆட்சியர் பிரதாப்பே களத்தில் இறங்கி உறி அடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். மேலும், பலூன் சுடும் போட்டியில் கலந்துகொண்டும் அடுத்தடுத்து சரியாக பலூன்களை சுட்ட ஆட்சியர், மற்ற அதிகாரிகளுக்கு துப்பாக்கி சுடும் முறையை கற்றுக்கொடுத்தார்.
பின்னர், கண்ணைக் கட்டிக் கொண்டு யானைக்கு கண் வரையும் போட்டியிலும் கலந்து கொண்டு அதிலும் வெற்றி பெற்றார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஆட்சியர் பிரதாப், " 90 ஸ் கிட்ஸ் காலத்தில் சுவைத்து சாப்பிட்ட தின்பண்டங்கள் எல்லாவற்றையும் இங்கு விற்பனைக்கு வைத்திருக்கிறோம். எனக்கு அந்த காலத்தில் 'மம்மி டாடி' சாக்லேட் மிகவும் பிடிக்கும். அந்த சாக்லேட்டையும், சக்கர சாக்லேட்டையும் வாங்கி சுவைத்தேன்" என்றார். மேலும், 90ஸ் கிட்ஸ் காலத்து சாக்லெட்டுகளை நிறைய வாங்கி வருவதற்காக தனது உதவியாளரிடம் பணம் கொடுத்தார் ஆட்சியர் பிரதாப். அதனைத் தொடர்ந்து கடந்த காலத்தில் தமிழர்களின் பாரம்பரியத்தில் முக்கிய கலைகளில் ஒன்றான பொம்மலாட்டத்தை தனது சக அதிகாரிகளுடன் அமர்ந்து பார்த்து மகிழ்ந்தார்.