“ஜெயிலர் 2 படத்தின் 3 நாட்கள் படப்பிடிப்பு ஜனவரியில் நடைபெறும்” என கன்னட நடிகர் சிவராஜ்குமார் தெரிவித்துள்ளார்.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 2023-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் ‘ஜெயிலர்’. சன்பிக்சர்ஸ் தயாரித்த இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் ரூ.600 கோடிக்கும் அதிகமான வசூல் ஈட்டியதாக தகவல் வெளியானது. இதில் கன்னட நடிகர் சிவராஜ்குமார், மலையாள நடிகர் மோகன்லால், இந்தியில் ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்டோர் சிறப்பு தோற்றத்தில் நடித்தனர்.
இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ‘ஜெயிலர் 2’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வெளியாகும் என ரஜினி தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்தப் படத்தின் சிவராஜ்குமார் நடிக்கிறார். இது தொடர்பாக ‘45’ படத்தின் புரோமோஷன் நேர்காணல் ஒன்றில் பேசியிருக்கிறார் சிவராஜ்குமார்.
அவர் கூறுகையில், “ஜெயிலர் 2’ படத்தின் ஒருநாள் படப்பிடிப்பை முடித்துவிட்டேன். நாளை படப்பிடிப்பு உள்ளது. மீண்டும் ஜனவரி மாதம் 3 நாட்கள் படப்பிடிப்பில் பங்கேற்க இருக்கிறேன். ஜெயிலர் படத்தின் தொடர்ச்சியாக இந்தப் படம் அமையும். முதல் பாகத்துடன் ஒப்பிடும்போது இதில் எனது கேமியோ கதாபாத்திரம் சற்று நீளமாக இருக்கும். இரு திரையுலகங்களுக்கும் இடையே நட்பை வலுப்படுத்தும் விதமாக இந்த கேமியோ கதாபாத்திரத்தில் நடிக்கிறேன்” என்றார்.