நாய்க்கடி சிகிச்சைக்கான அறிவிப்பு பலகை எங்கே? அமைச்சரின் ஆய்வில் சிக்கிய மருத்துவ அதிகாரிகள்!

நாய்க்கடி சிகிச்சைக்கான அறிவிப்பு பலகை எங்கே? அமைச்சரின் ஆய்வில் சிக்கிய மருத்துவ அதிகாரிகள்!

கண்ணமங்கலம் பகுதி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் மா.சுப்ரமணியன், பாம்புக்கடி மற்றும் நாய்க்கடிக்கு சிகிச்சை வழங்கப்படுவது குறித்து அறிவிப்புப் பலகையை வளாகத்திற்குள் வைக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

திருவண்ணாமலை மாவட்டத்தின் கண்ணமங்கலம் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில், தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அதிகாலை நேரத்தில் முன்னறிவிப்பு இன்றி பயணித்த அமைச்சர், அந்த நிலையத்தில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் செயல்பாட்டு பணியாளர்கள் பணியில் உள்ளார்களா? என்பதை நேரில் பார்வையிட்டார். அதோடு அவசர சிகிச்சைக்கு தேவையான கருவிகள், மருந்துகள், மாத்திரைகள் உள்ளிட்ட வசதிகள் சரியாக உள்ளனவா எனவும் ஆய்வு செய்தார்.

மேலும் அவர், 'இல்லம் தேடி மருத்துவம்' திட்டத்தின் பயனாளர்களுடன் 'செல்ஃபோன்' மூலம் நேரடியாக கலந்துரையாடினார். மாதந்தோறும் வழங்கப்படும் நோய் தடுப்பு மாத்திரைகள், பரிசோதனை உள்ளிட்ட சேவைகள் முறையாக கிடைக்கிறதா என்று அப்போது அவர்களிடம் கேட்டறிந்தார். அப்போது சில பயனாளிகள், தங்களுக்கு தேவையான மருந்துகள் சரியாக வழங்கப்படுகின்றன என்று தெரிவித்தனர். எனினும் அமைச்சர் அதில் மேலும் ஆய்வு செய்து, மருத்துவப் பணிகள் தொடர்ச்சியாக நடைபெறுவதற்கான வழிமுறைகளை வலியுறுத்தினார்.

அதனைத்தொடர்ந்து, பாம்புக்கடி மற்றும் நாய்க்கடிக்கு தரப்படும் அவசர சிகிச்சை மற்றும் மருந்து இருப்பு குறித்தும் ஆராய்ந்தார். அதற்கான மருந்துகள் போதுமான அளவில் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆனால், அந்தச் சிகிச்சைகள் இங்கு வழங்கப்படுகின்றன என்பதை குறிப்பிடும் அறிவிப்புப் பலகை நிலையத்தின் வெளிப்புறத்தில் இல்லை என்பதைக் கவனித்தார்.

இதுகுறித்து மருத்துவ அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டு, உடனடியாக அந்த அறிவிப்பு பலகையை வைக்க உத்தரவிட்டார். மக்களுக்கு தேவையான தகவலை எளிதில் அறிந்து, தாமதமின்றி சிகிச்சை பெறும் வசதியை உறுதி செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்கும்படியும் அவர் அறிவுறுத்தினார்.

தமிழ்நாட்டில் சமீபகாலமாக தெரு நாய்க்கடியால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சாலையில் செல்வோரை தெருநாய்கள் சுற்றி வளைத்து கடிக்கிற சம்பவங்கள் தொடர் நிகழ்வாக இருந்து வருகிறது. இதனால் ரேபிஸ் தொற்று ஏற்பட்டு பலர் உயிரிழந்துள்ளனர்.

குறிப்பாக தெரு நாய்க்கடியால் குழந்தைகள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலுமே தெருநாய்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ள நிலையில், கடந்த சில மாதங்களாக தெருநாய்களுக்கு கருத்தடை செய்தல், ரேபிஸ் முகாம் நடத்தி தடுப்பூசி செலுத்துதல் போன்ற பணிகள் முடிக்கிவிடப்பட்டுள்ளன.