தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை எப்போது? வானிலை ஆய்வு மையம் கொடுத்த அப்டேட்!

வடகிழக்குப் பருவமழை அக்டோபர் 16 முதல் 18-ம் தேதிகளுக்குள் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் தொடங்க சாத்தியம் இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான வடகிழக்குப் பருவமழை காலங்களில், தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் அதி கனமழை கொட்டித் தீர்ப்பது வழக்கம். இந்த பருவ மழையை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
ஏற்கனவே, இந்த ஆண்டு அக்டோபர் 20 ஆம் தேதிக்குப் பிறகு வடகிழக்குப் பருவமழை தொடங்கும் எனவும், இதனால் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் இரண்டு புயல்கள் உருவாக வாய்ப்புள்ளது எனவும் டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்திரன் தெரிவித்திருந்தார். இதனால் தமிழ்நாட்டில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, புதுச்சேரி, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, காரைக்கால், நாகப்பட்டினம் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் புயல் உருவாகக் கூடும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், வடகிழக்குப் பருவமழையானது அக்டோபர் 16-18 ஆகிய தேதிகளில் தொடங்க சாத்தியம் இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “தென்மேற்கு பருவமழை வரும் அக்டோபர் 16-18 தேதிகளில் இந்திய பகுதிகளில் இருந்து விலகுவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன.
அதே நேரம் வளிமண்டல கீழடுக்குகளில் கிழக்கு அல்லது வடகிழக்கு திசை காற்று வீசக்கூடிய நிலையில், தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை வரும் 16- 18 தேதிகளில் துவங்குவதற்கான சாத்தியம் உள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக, வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த 3 நாட்கள் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனையடுத்து, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கோயம்புத்தூர், நீலகிரி, மயிலாடுதுறை, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
அதே போல், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், தேனி, திண்டுக்கல் ஆகிய தென் மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இன்று (அக்.10) கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர் மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.