"உலகை ஈர்க்கும் மாநிலமாகத் தமிழகம் உயர்ந்துள்ளது"- முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்!

"உலகை ஈர்க்கும் மாநிலமாகத் தமிழகம் உயர்ந்துள்ளது"- முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்!

விண்வெளி மற்றும் பாதுகாப்புத் தொழில்களுக்கான (AeroDefCon 25) கண்காட்சி மற்றும் கருத்தரங்கைச் சென்னை நந்தம்பாக்கத்தில் தொடங்கி வைத்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், "இந்தியாவை ஈர்க்கும் மாநிலம் என்ற நிலையில் இருந்து உலகை ஈர்க்கும் மாநிலமாகத் தமிழ்நாடு உயர்ந்துள்ளது" என்று பெருமிதம் தெரிவித்தார்.

தொடக்க விழாவுக்குப் பின் பேசிய முதல்வர், உற்பத்தித் துறையில் தமிழகம் 'லீடராக' மாறி வருவதாகக் கூறினார். மேலும், இரட்டை இலக்கப் பொருளாதார வளர்ச்சியைப் பெற்ற ஒரே மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

"தமிழகம் நடத்தும் மாநாடுகள் இன்று உலக அளவில் பேசப்படுகின்றன" என்று கூறிய அவர், தமிழகம் அனைத்து வகையான வளர்ந்து வரும் தொழில்களையும் கொண்டுள்ளதாகவும், உலக அளவில் வளரும் பொருளாதாரம் கொண்ட மாநிலமாகத் திகழ்வதாகவும் தெரிவித்தார். தமிழகத்தில் 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன என்றும் அவர் கூறினார்.

"இந்திய விண்வெளித் துறை வளர்ச்சிக்குத் தமிழகம் உறுதுணையாக இருக்கும்" என்று முதல்வர் ஸ்டாலின் உறுதி அளித்தார். இன்று தான் தொடங்கி வைத்தது வெறும் கண்காட்சி மட்டுமல்ல என்றும், அது முதலீட்டாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்களைக் கண்டறியும் தளமாகும் என்று அவர் தெரிவித்தார்.

தமிழக பாதுகாப்புத் தொழில்துறை வழித்தடம் (Defence Corridor) எதிர்காலத்தில் முக்கியப் பங்காற்ற உள்ளது என்று கூறிய அவர், பாதுகாப்புத் துறையில் தமிழகம் ஒரு முக்கிய மையமாக மாறும் என்று நம்புவதாகவும் தெரிவித்தார். இத்துறையில் ரூ.23,000 கோடிக்கு மேல் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாகவும், சென்னை அருகே 'ஏரோஹப்' (AEROHUB) என்ற திட்டம் முடிவடையும் நிலையில் உள்ளதாகவும் முதல்வர் குறிப்பிட்டார்.

தமிழகத்தின் ஒவ்வொரு பகுதியும் முதலீடுகளுக்கு உகந்த பகுதிகளாகத் திகழ்கிறது என்றும், அனைத்து வகையான தொழில்களிலும் தமிழகம் தடம் பதித்து வருகிறது என்றும் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.