கன்னியாகுமரியில் பதற்றம்! 13 பேரை கடித்து குதறிய தெருநாய்!
மணக்குடி மீனவ கிராமத்தில் தெருநாய் ஒன்று கடித்ததில் படுகாயமடைந்த குழந்தைகள் உட்பட 13 பேர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
தமிழ்நாட்டில் தெருநாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவற்றின் எண்ணிக்கையை குறைக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் அவை குறைந்தபாடில்லை. அந்த வகையில், கன்னியாகுமரி மாவட்டம் மணக்குடி மீனவ கிராமத்தில் நேற்று இரவு சாலையோரம் சுற்றித்திரிந்த தெருநாய் ஒன்று, திடீரென அப்பகுதியில் நின்று கொண்டிருந்த நபர்களை சரமாரியாக கடித்திருக்கிறது. தொடர்ந்து சுமார் 300 மீட்டர் தூரம் வரை அங்குமிங்கும் ஓடி சாலையோரம் நின்றவர்களை கடித்துக்கொண்டே சென்றுள்ளது.
மேலும், குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து அங்கிருந்த பெண்கள் மற்றும் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளையும் கடித்திருக்கிறது. அதில் ஒரு குழந்தையை கடித்து இழுத்து சென்றுள்ளது. உடனே அப்பகுதி மக்கள் ஒன்றுசேர்ந்து வெறி நாயை அடித்து விரட்டிவிட்டு குழந்தையை மீட்டுள்ளனர். நாய் கடித்ததில் 16க்கும் மேற்பட்ட நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, படுகாயம் அடைந்த 8 பேர் நாகர்கோவில் அடுத்த ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகயில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதில் மூன்று குழந்தைகளுக்கு தலை, முகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நாய் கடித்த நிலையில் அவர்கள் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் அழகுமீனா, மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்றுவரும் குழந்தைகள் மற்றும் பெரியவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். தொடர்ந்து, மருத்துவ கல்லூரி முதல்வரும் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைமுறைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்ததோடு, சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கவும் அறிவுறுத்தினார்.
இச்சம்பவம் குறித்து அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கூறுகையில், “மணக்குடி பகுதியில் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்துள்ளது. வெளியூரைச் சேர்ந்தவர்கள் நாய்க்குட்டிகளை தங்கள் வாகனங்களில் கொண்டுவந்து இந்த பகுதிகளில் விட்டுச் செல்கின்றனர். இதனால் மணக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நாய்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.
சுமார் 20 நாட்களுக்கு முன்பாக இதேபோல் 9 பேரை தெருநாய்கள் கடித்தன. இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது மீண்டும் குழந்தைகள், பெண்கள் உட்பட பலரை தெருநாய் தாக்கியிருக்கிறது. ஆகவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து இங்குள்ள தெரு நாய்களை அப்புறப்படுத்த வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.