கடலில் மூழ்கி உயிரிழந்த 3 சிறுவர்கள்: தலா ரூ. 3 லட்சம் நிவாரணம் வழங்கிய அமைச்சர்
தூத்துக்குடியில் கடலில் மூழ்கி உயிரிழந்த 3 சிறுவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 3 லட்சம் நிவாரணத் தொகையை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டம் தாளமுத்து நகர் அருகே உள்ள கீதா ஜீவன் நகரைச் சேர்ந்த கதிரேசன் மகன் முகேந்திரன் (12), வனராஜ் மகன் திருமணி (14), கார்த்திக் மகன்நரேன் ஸ்ரீ (13) ஆகியோர் அங்குள்ள பள்ளியொன்றில் 8ஆம் வகுப்பு படித்து வருகின்றனர்.
இதனிடையே, நேற்று முன்தினம் குடியரசு விடுமுறை என்பதால் கபடி விளையாட போவதாக வீட்டில் கூறிவிட்டு, தாளமுத்து நகர் மொட்டை கோபுரம் கடல் பகுதியில் இறங்கி குளிக்கச் சென்றுள்ளனர். மிக ஆழமான பகுதிக்கு சென்ற அவர்களால் திரும்பி வர முடியவில்லை. இதனால் நீண்டநேரம் கடலில் தத்தளித்த அவர்கள் மூவரும், தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
தகவலறிந்து வந்த தருவைகுளம் கடலோர பாதுகாப்பு குழும போலீசார், மாணவர்களின் சடலங்களை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசாரும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த மூன்று மாணவர்களின் குடும்பங்களுக்கு தனது ஆழந்த இரங்கலை தெரிவித்த தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அவர்களின் குடும்பங்களுக்கு பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.3 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து தமிழக மீனவளத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 3 லட்சத்துக்கான காசோலைகளை நேரில் வழங்கி ஆறுதல் தெரிவித்தார்.