கரூர் கோயில் குடமுழுக்கில் சமஸ்கிருதத்துக்கு இணையாக தமிழ் - நீதிமன்றம் அதிரடி உத்தரவு
கரூர் தான்தோன்றிமலை கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயில் குடமுழுக்கில் சமஸ்கிருதத்துக்கு இணையாக தமிழை பயன்படுத்த வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
கரூர் பகுதியை சேர்ந்த தமிழ் ராஜேந்திரன் என்கிற வழக்கறிஞர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்து இருந்தார்.
அந்த மனுவில், '' வருகிற 28ம் தேதி கரூரில் உள்ள புகழ்பெற்ற கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயிலில் குடமுழுக்கு நடைபெற உள்ளது. இந்த கோயில் பெருமாள் கோயில் என்று பெரும்பாலும் அழைக்கப்பட்டு வருகிறது. இந்த கோவில் குடமுழுக்கின் போது, ஏற்கனவே பல ரிட் மனுக்களில் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு ஏற்ப, சமஸ்கிருத மந்திரங்களுக்கு இணையாக தமிழ் மந்திரங்களை
ஓதுவதற்கு அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும்.'' என கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், '' ஓதுவார்கள் யாகசாலைக்கு வெளியே பாசுரம் பாடுகிறார்கள். இது ஒரு வகை தீண்டாமை தான். எனவே ஏற்கனவே உயர் நீதிமன்றம் அமர்வு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் குடமுழுக்கு நடைபெற வேண்டும்.'' என வாதிட்டார்.
அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், '' ஏற்கனவே உள்ள உயர் நீதிமன்ற உத்தரவு பின்பற்றப்படுகிறது. ஆழ்வார் பாசுரங்கள், நாலாயிர திவ்ய பிரபந்தம் ஓதப்படுகிறது.'' என வாதிட்டார்.
இதைத் தொடர்ந்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், '' ஏற்கனவே கரூர் பசுபதீஸ்வரர் கோயிலில் தமிழில் குடமுழுக்கு நடத்த நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் புகழேந்தி கொண்ட அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவுக்கு ஏற்ப கரூர் தான்தோன்றிமலை கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயில் குடமுழுக்கில் சமஸ்கிருதத்துக்கு இணையாக தமிழை பயன்படுத்த வேண்டும். தமிழ் ஓதுவார்களை குண்டத்துக்கு வெளியே அமர வைக்க கூடாது. அவர்களை யாக குண்டத்துக்குள் உட்கார வைக்க வேண்டும். மேலும் இந்த உத்தரவு பின்பற்றப்படுகிறதா? என்று குடமுழுக்கு முடிந்த பிறகு நீதிமன்றத்திற்கு முறையாக அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.'' என்று நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி உத்தரவிட்டார்.